தவக்கால சிந்தனை

தன்னலம் தவிர்ப்போம்

“நான் முதலிடம் பெறவேண்டும்”, “நான் சிறப்பிடம் பெறவேண்டும்” என்ற சிந்தனையே இன்று எங்கும் எதிலும் மேலோங்கி நிற்கின்றது. இத்தகைய குறுகிய வட்டத்திற்கு வெளியே நின்று சிந்திக்கின்ற செயலாற்றுகின்ற மனிதர்களைக் காண்பது இன்று அரிதாகிவிட்டது. ‘நான்’ என்ற அகந்தையும், ‘எனக்குத்தான்’ என்ற சுயநலமும் கடவுளின் பார்வையில் அருவருப்பானவை.

இன்றைய நற்செய்தியில் யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரின் தாய் இயேசுவிடம் வந்து தனது இரண்டு மகன்களுக்காகவும் பரிந்துபேசுகின்றார். இயேசுவின் அரசுரிமையில் அவர்கள் பங்குபெறவேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக இருந்தது.

இந்தக் கோரிக்கையினால் ஏனைய சீடர்கள் கோபமுறுகின்றனர். அதற்கு இயேசு வழங்கும் பதில் மிகவும் முக்கியமானது. “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்”.

இயேசுவின் இந்த வார்த்தைகள் இன்றைய உலக மதிப்பீட்டின்படி சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் இயேசு கூறுகின்ற வழிதான் உண்மையின் வழி, நன்மையின் வழி. தொண்டராகவும் பணியாளராகவும் இருக்க இன்று யாருக்கும் விருப்பம் இல்லை. எடுத்த எடுப்பிலேயே தலைவனாக வேண்டும், அதிகாரியாக வேண்டும் என்பதே இன்றைய சமூகத்தின் எதிபார்பார்ப்பு.

நம்முடைய வாழ்க்கையில் அகந்தையும் சுயநலனும் இருக்கும்போது நாம் கடவுளின் பிள்ளைகளாக இருக்க முடியாது. நம்மை முன்னிலைப்படுத்தாது பிறரை முன்னிலைப்படுத்துகின்ற மனநிலை நமக்குத் தேவை.

எல்லோரும் எனக்குப் பணிபுரிய வேண்டும் என்ற மனநிலை மாறி நான் மற்றவர்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்ற பரந்த மனப்பான்மைக்குள் நாம் கடந்துசெல்ல வேண்டும். அப்போதுதான் நாம் இறையரசின் மக்களாவோம். தன்னலம் தவிர்ப்போம், பிறர்நலம் பேணுவோம்!

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை