தேங்காய், மரக்கறி விலைகளை குறைக்க அரசு விசேட திட்டம்

உளுந்து, மஞ்சள் இறக்குமதி தடை தற்காலிக நீக்கம்

​தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தவிர மஞ்சள் மற்றும் உளுந்து இறக்குமதிக்கான தடையை தற்காலிகமாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்திலேயே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

குருநாகல் பெருந்தோட்ட கம்பனி,சிலாபம் பெருந்தோட்ட கம்பனி மற்றும் தெங்கு பயிரிடும் சபை என்பன இணைந்து சதொச உள்ளிட்ட அரச நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ், நிவாரண விலையில் பாவனையாளர்களுக்கு தேங்காய் வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்கவும் இதன் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

உழுந்து மற்றும் மஞ்சள் இறக்குமதிக்கு தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்கவும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மீன்,கோழி இறைச்சி,முட்டை விலைகள் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது. உள்ளூர் பால்மா உற்பத்திக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி சந்தை போட்டி அடிப்படையில் பாவனையாளர்களுக்கு பால்மா வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மரக்கறி விலை உயர்வு பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையங்களினூடாகவும் சதொச ஊடாகவும் இதற்கென திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விலைகளை அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது ஆலோசனை வழங்கியுள்ளார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Thu, 03/05/2020 - 06:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை