உலகெங்கும் இஸ்லாமிய வழிபாடுகளில் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உள்நாட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பிரஜைகளுக்கும் உம்ரா யாத்திரைக்கு சவூதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

ஏற்கனவே மக்காவுக்கான உம்ரா யாத்திரைக்கு வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே சவூதி நேற்று இந்த முடிவை எடுத்துள்ளது.

சவூதியில் இந்த வாரம் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று சம்பவம் பதிவாகி இருந்தது. ஈரானில் இருந்து வந்த சவூதி பிரஜை ஒருவருக்கே வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே உள்நாட்டினருக்கும் உம்ரா தடை கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஹஜ் கடமை போலன்றி உம்ரா வழிபாடு கட்டாயம் இல்லை என்பதோடு எந்த ஒரு காலத்திலும் ஈடுபட முடியும்.

மறுபுறம் மத்திய கிழக்கில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிப்புற்றிருக்கும் ஈரானின் அனைத்து மாகாண தலைநகரங்களிலும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருபவர்கள் சொந்தமாக விரிப்புகளை கொண்டுவரும்படியும் ஒருவருக்கு ஒருவர் கைகொடுப்பதை தவிர்க்கும்படியும் அந்நாட்டு முஸ்லிம் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தஜிகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகாதபோதும் அங்கு ஜும்மா தொழுகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் பெரும்பான்மை நாடான தஜிகிஸ்தான் தனது நாட்டின் சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை மூடியுள்ளது. ஈராக்கில் ஷியா புனித நகரான கர்பலாவிலும் வெள்ளிக்கிழமை தொழுகை ரத்துச் செய்யப்பட்டதாக புனிதத் தல நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை