அவசரகால நிலையை பிரகடனப்படுத்த கோருகிறது மருத்துவர் சங்கம்

நாட்டில் பரவும் கொவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமாக இல்லாவிட்டால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

"அநாவசியமான மக்கள் நடமாட்டங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அவ்வாறு மீறி செயற்படுவோர் கொவிட்-19 ஐ நாட்டுக்குள் பரப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டுக்குள் இருக்கும் எஞ்சிய கொவிட்-19 நோயாளிகளை இனம் கண்டு அவர்களின் நடமாட்டத்தை அப்பிரதேசத்தில் தடை செய்ய வேண்டும். இல்லையேல் இந்நோய் நாடு முழுவதும் பரவி விடும். அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களை மட்டுமன்றி அவர்களது தொடர்புகளையும் முறையாக இனங் கண்டு தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் பதிவாகும் கொவிட்-19 சம்பவங்களை பார்க்கும் போது எதிர்வரும் இரண்டு வார காலமும் நாட்டில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கலாமென்றும் அவர் கூறினார்.

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை