கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளை இணைத்து வீணையில் போட்டி

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு வீணை சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பல்வேறு கட்சிகளும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தீர்மானத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். இதற்கிணங்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீணை சின்னத்தில் தம்முடன் இணையும் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடவுள்ளதாகவும் தெற்கில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மக்களின் நலன்களில் அக்கறைகொள்ளாது தமது சுயலாபத்திற்கிணங்கவே இதுவரை காலமும் செயற்பட்டு வந்துள்ளது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இம்முறை மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக போட்டியிடும் எமக்கு தேர்தலில் அதிக ஆதரவு கிடைக்கும். அதேவேளை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதனை வடக்கு கிழக்கு மக்களுக்கு வாக்குறுதியாக வழங்குகிறோம். எமக்கு கிடைக்கும் அதிகரித்த மக்கள் ஆதரவின் மூலம் அரசாங்கத்துடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எம்மால் மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை