உலகெங்கும் ஒன்றுகூடல்களுக்கு தடை: பயணங்களுக்கு கட்டுப்பாடு

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தாய்லாந்தில் முதல் உயிரிழப்பு

புதிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவிவரும் நிலையில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காஸ் நாடுகளில் பாரிய ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு பயணக் கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்–19 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸினால் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. வொஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த ஏற்கனவே சுகாதார பிரச்சினை உள்ள 50 வயதுகளில் இருக்கும் ஆடவர் ஒருவரே உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவங்கள் பதிவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எந்த ஒரு சூழலுக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் நேற்று அவுஸ்திரேலியா மற்றும் தாய்லாந்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட டயமன்ட் பிரின்சஸ் செகுசுக் கப்பலில் இருந்து இந்த வைரஸ் தொற்றிய 78 வயது அவுஸ்திரேலியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்தில் இதுவரை 42 பேருக்கு வைரஸ் தொற்றியிருக்கும் நிலையில் 35 வயது ஆடவர் ஒருவர் டெங்கு காய்ச்சலாலும் பாதிப்புற்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன்படி உலகெங்கும் இருந்து 57 நாடுகளில் 85,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. அதில் கடந்த ஆண்டு இறுதியில் இந்த வைரஸ் முதல் முறை தோன்றிய சீனாவிலேயே அதிகம் பேர் உயிரிழந்து மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மெட்ரிட்டில் இருந்து வந்த பெண் ஒருவரிடம் இருந்து ஈக்வடோரில் முதலாவது கொரோன வைரஸ் சம்பவம் பதிவானதோடு மெக்சிகோவில் இத்தாலியில் இருந்து வந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. பிரேசியில் இரண்டாவது கொரோனா தொற்று சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகெங்கும் அரசுகள் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. பிரான்ஸில் 5000க்கும் அதிகமானோர் பங்கேற்கும் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் புதிதாக 16 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு மொத்தம் 73 பேருக்கு வைரஸ் தொற்றி இருக்கும் நிலையில் 40,000 ஓட்ட வீரர்கள் பங்கேற்கும் மரதன் போட்டி ஒன்று நேற்று ரத்துச் செய்யப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் 1,000 பேர் வரை ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கும் வைரஸ் தொற்றியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கனேரியா தீவுகளில் உள்ள ஹோட்டல் ஒன்று 700க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இ்ந்தத் தொற்றினால் ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியின் மூன்று வடக்கு பிராந்தியங்களில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து இரண்டாவது வாரமாகவும் மூடப்பட்டுள்ளது. அந்நாட்டில் 1,100 பேருக்கு வைரஸ் தொற்றி இருப்பதோடு 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கில் இந்த வைரஸ் 13 பேருக்கு தொற்றியிருப்பதோடு, கட்டாரில் முதல் வைரஸ் தொற்று சனிக்கிழமை பதிவானது. இதன்படி வளைகுடா நாடுகளில் வைரஸ் தொற்று பாதிப்பை வெளிக்காட்டாத ஒரே நாடாக சவூதி அரேபியா உள்ளது.

ஈரானை மையமாகக் கொண்டே வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. ஈரானில் இருந்து வந்தவர்கள் அல்லது ஈரானுடன் தொடர்புபட்டே அங்கு வைரஸ் பரவிவருகிறது.

அண்டை நாடான ஈரானில் இருந்து வந்த தமது நாட்டு பிரஜை ஒருவர் மூலம் ஆர்மேனியாவில் முதல் வைரஸ் தொற்று நேற்று பதிவானது.

ஈரானில் வரும் செவ்வாய்க்கிழமை வரை பாடசாலைகளை மூடி இருக்க உத்தரவிடப்பட்டிருப்பதோடு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும் காலத்தையும் நீடித்துள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 600 ஐ எட்டியிருக்கும் நிலையில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களுக்கு வருகை தருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸினால் ஈரானில் இதுவரை 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதோடு கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தேர்வான ஒரு உறுப்பினரும் உயிரிழந்துள்ளார். தவிர அரசின் பல உயர் அதிகாரிகளுக்கும் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோன வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவில் கடந்த சனிக்கிழமை 573 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 35 பேர் உயிரிழந்து அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,870 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்து அதிகம் வைரஸ் பாதிப்புற்ற நாடாக தென் கொரியா உள்ளது. அங்கு புதிதாக 376 பேருக்கு வைரஸ் தொற்றி இருப்பதோடு வைரஸ் தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 3,526 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தென் கொரியாவில் தேவாலயங்கள் மூடப்பட்டிருப்பதோடு ஒன்றுகூடல்களை மட்டுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை