சகல பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தம்

இயல்பு வாழ்வை முடக்க முடியாது

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டும்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு முதல் இலங்கை வரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பிரச்சினைக்காக நாட்டின் சாதாரண இயல்பு வாழ்வை முடக்க முடியாது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி பொருளாதாரம்,வர்த்தக செயற்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு நிறுவன தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

34 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்காக நாட்டை மூடிவிட முடியாது என்று கூறி மக்களை பீதிக்குள்ளாக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். இதே வேளை,இந்தியாவின் புத்தகயாவிற்கு யாத்திரை சென்று அங்கு சிக்கியுள்ள 1200 இலங்கையர்களை விசேட விமானம் மூலம் அழைத்து வரவும் ஜனாதிபதியும் பிரதமரும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரைவழங்கியுள்ளனர்.

கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை அளித்துள்ளார்.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ,அமைச்சின் செயலாளர்கள்,முப்படை தளபதிகள்,பொலிஸ் மா அதிபர்,நிறுவன தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டியிருந்தாலும் நாட்டை செயலிழக்கச்செய்ய முடியாது எனவும் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.அவற்றை செயற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கலந்துரையாடலை ஆரம்பித்து கொரோனா அச்சுறுத்தலை வெற்றிகொள்வதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி , நோய் தடுப்பு செயலணி ஜனவரி 26 ஸ்தாபிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அதுவரை எந்தவொரு நாடும் இவ்வாறான நிலையம் ஒன்றை ஆரம்பித்திருக்கவில்லை. சீனாவின் வூஹான் நகரம் மற்றும் ஏனைய நகரங்களில் இருந்த மாணவர்கள் உட்பட அனைத்து இலங்கையரும் திருப்பி அழைத்துவரப்பட்டனர்.

நாட்டுக்கு வரும் அனைவரையும் நோய் கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்காக பல நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வைரஸ் பரவுவதை தடுக்கும் செயற்பாட்டை மேலும் இலகுபடுத்தும் நோக்கத்துடனேயே திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் 03 நாட்கள் அத்தியாவசிய சேவை தவிர ஏனைய பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா குறித்து கவனம் செலுத்தும் அதே வேளை நாட்டின் பொருளாதார நிலைமை பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர்,மக்களை வாழ வைப்பதும் பிரதானமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றுள்ள நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி வருகிறோம்.ஆனால் வரும் அனைவரையும் தடுத்து கண்காணிப்பது கடினம்.இதற்காக ஹோட்டல்களையும் பெற நேரிடும்.எனவே இது தொடர்பில் கடுமையான முடிவ எடுக்க வேண்டும்.சகல நாடுகளில் இருந்தும் வருவதை நிறுத்த முடிவு எடுப்பதே உகந்தது எனவும் ஜனாதிபதி கூறினார்.

இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் கருத்து கூறினார்கள்.ஆனால் மக்களின் பாதுகாப்பே பிரதானமானது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி கடினமானதாக இருந்தாலும் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாக கூறினார்.நாட்டுக்கு வரும் அனைவரையும் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதன் படி வெளிநாடுகளில் இருந்து வருவது இருவாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவதோடு பொருட்கள் எடுத்து வரும் விமானங்களுக்கும் இங்கிருந்து திரும்பிச் செல்லும் விமானங்களுக்கும் மாத்திரம் அனுமதி வழங்கவும் இதன் போது முடிவு செய்யப்பட்டது.

யாத்திரைக்காக இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் பல இடங்களில் தங்கியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். அவர்களை ஒரு இடத்தில் ஒன்றுசேர்த்து மீண்டும் அழைத்துவருவதற்காக விமானம் ஒன்றை அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பு விடுத்த அறிவித்தலுடன் வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து நோய் கண்காணிப்பு செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படாது மறைந்து இருப்பவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் பற்றி மக்களை தெளிவுபடுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஒன்றுகூடல், பல்வேறு விழாக்கள் மற்றும் மக்கள் ஒன்றுசேர்தல் போன்றவற்றை இயலுமான அளவு குறைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

வைரஸ் பரவுவதை அடிப்படையாகக்கொண்டு மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் நோக்கத்துடன் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் விடுமுறை வழங்குவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

-ஷம்ஸ் பாஹிம்

 

 

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை