ஊரடங்குச் சட்டத்தின் தாற்பரியமறிந்து மக்கள் செயற்பட வேண்டும்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் தாற்பரியத்தை அறியாது பொறுப்பற்ற விதத்தில் பொதுமக்கள் நடந்துகொள்வது கவலையளிக்கிறது.

அபாய நிலைமையை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமென சட்டம், ஒழுங்குக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்தார்.

இராஜகிரியவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,...

புத்தளத்தில் 18 பொலிஸ் பிரிவுகளுக்கும் நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளுக்கும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நேற்றுமுன்தினம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்குச் சட்டம் கலவர நிலைமைகளில் பிறப்பிக்கப்படும் ஊடரங்குச் சட்டத்திற்கு மாறானது. இக்காலப்பகுதியில் பொது மக்கள் தமது வீடுகளில் இருக்க வேண்டுமென்பதற்காகவே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்குச் சட்டத்தின் தாற்பரியத்தை புரிந்துக்கொள்ளாது மக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்து கொள்வது கவலையளிப்பதாகவுள்ளது.

ஒன்று கூடல்கள் நடத்த வேண்டாமென கூறியிருந்தோம். ஆனால், அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து ஒன்று கூடல்களை நடத்துவதுடன் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்து கொண்டாடுகின்றனர். காலை எட்டு மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் வழமை போன்று அனைவரும் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

மக்கள் இவ்வாறு நடந்து கொண்டால் எமது இலக்கை அடைய முடியாது. ஊரடங்குச் சட்டம் பிறக்கப்படுவதும் அர்த்தமற்றாகிவிடும். கொரோனா வைரஸ் ஊரடங்குச் சட்டம் வாபஸ் பெற்றதும் தாக்காது என்பதல்ல இதன் அர்த்தம். ஆகவே, பொது மக்கள் மிகவும் பொறுப்புடன் இக் காலப்பகுதியில் நடந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம் இதுவரை வெளிநாடுகளில் இருந்துவந்த 8437 பேர் பொலிஸ் நிலையங்களில் தமது விபரங்களை பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை