சிரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவு!

இதுவரை காலமும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வந்த சிரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்  காரணமாக முதல் மரணம் பதிவாகியுள்ளது.

இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் (29) உயிரிழந்துள்ளார்.

இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்தோடு 09 பேர் கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இந்நோய்த் தொற்று இன்னும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அந்நாட்டில் 64 வீதமான வைத்தியசாலைகள் மாத்திரமே முழுமையாக செயற்பட்டு வருவதோடு, பயிற்சி பெற்ற வைத்திய பணியாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிரியாவில் இடம்பெயர்ந்துள்ள 06 மில்லியன் மக்கள் நெரிசலாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருவதோடு, அவர்கள் போதியளவான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அரசாங்கமானது, நாட்டின் பெரிய நகரங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதோடு பலவிதமான தடுப்பு நடவடிக்கைகளையும் விதித்துள்ளது.

அந்த வகையில் இரவு வேளை ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளதோடு, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்தியுள்ளது. அத்தோடு பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூடியுள்ளது. பொதுநிகழ்வுகள், கூட்டங்கள் கூடுவதை தடை செய்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

Tue, 03/31/2020 - 10:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை