பாராளுமன்றம் கலைந்தாலும் ஆரம்பித்த திட்டங்களில் ஆணைக்குழு தலையிடாது

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு தடை விதிக்காது என பிரதித் தேர்தல் ஆணையாளர் சமன் ரத்னாயக்க தினகரனுக்கு தெரிவித்தார்.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குதல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்குதல் போன்ற திட்டங்களை முன்னெடுப்பதில் எந்தச் சிக்கலும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் செயற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றம் கலைக்கப்படும் நிலையில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குதல், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் என்பவற்றை தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா என வினவியதற்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று முதல் அனுப்பப்பட்டு வருவதோடு ஒரு பகுதியினருக்கு நேற்று கடிதங்கள் கிடைத்துள்ளன.பாராளுமன்றம் கலைக்கப் படுவதோடு இந்த செயற்பாடுகள் தடைப்படலாமென அச்சம் எழுந்துள்ளது.

இது பற்றி தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஏற்கெனவே ஆரம்பித்துள்ள திட்டங்கள் தொடர்ந்து செயற்படுத்தப்படுவதை தடுக்க முடியாது.அவை தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. அவற்றை தொடர்வதற்கு அரசாங்கத்தினால் முடியும். தேர்தல் அறிவிப்பின் பின்னர் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது தேர்தல் சட்டத்திற்கு முரணானது.அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ரத்னாயக்க கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் எதிர்வரும் நாட்களில் கைச்சாத்திடப்படுவது குறித்தும் அவரிடம் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பிரதி ஆணையாளர், இதுவும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.ஒப்பந்தம் பின்னர் கைச்சாத்திட்டாலும் அதற்கும் எம்மால் தடை போட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை