அம்பாறை முஸ்லிம்களின் முன்மாதிரி பாராட்டத்தக்கது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையிலும் கூட அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்ததாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.சி.பண்டாரநாயக்க தெரிவித்தார். 

தீகவாபி ரஜமஹாவிகாரையில்  அண்மையில் இடம்பெற்ற விசேட பிங்கம நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலே  இவ்வாறு தெரிவித்தார். 

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்நிகழ்வை வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாடு செய்தது. இங்கு உரையாற்றிய அவர்: ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை  கண்டு பிடிப்பதில் இம்மாவட்ட மக்கள் அதிக ஒத்துழைப்புக்களை வழங்கினர். இதனாலேயே இப்பிரச்சினையைத் தீர்க்க முடிந்தது.இதனால் அம்பாறை மாவட்ட மக்களின் கீர்த்தி சர்வதேசத்திற்கே உயர்ந்தது.  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட இலங்கையர் என்பதையும் இவர்கள் நிரூபித்துள்ளனர். இந்த பிங்கம நிகழ்வில் கலந்து கொண்ட பௌத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் 500 கிலோ அரிசியை எம்மிடம் ஒப்படைத்தார்.

இவ்விடத்திற்கு சமுகமளித்திருந்த எங்களை மட்டுமன்றி அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அதிலுள்ளோருக்கு குளிர்பானங்களை இப்பிரதேச முஸ்லிம் சிறார்கள் வழங்கியமை மிக்க மகிழ்ச்சிக் குரியது. பேதங்களுக்கு அப்பாலான சமூகங்களைக் கட்டியெழுப்ப இச்சிறார்கள் நல்ல முன்மாதிரியாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய மெல்பேர்ன் நுவரதர்மன்ரத்ன விகாராதிபதி, பூஜ்ய தெரோவே ஞானரத்ன ஹிமி, அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.பி.ஹேரத், தமன பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க, இறக்காமம் உப பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.வை.ஜௌபர் வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

(இறக்காமம் தினகரன் நிருபர்)    

Wed, 03/04/2020 - 16:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை