கொரோனா பரவுதலைக் குறைத்தல்; அரசின் செயற்பாடே காரணம்

சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு

உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாகக் காணப்படுவதற்கு இந்நாட்டில் நிலவும் கடும் உஷ்ண காலநிலை எவ்விதத்திலும் காரணமல்ல என்று சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியக மருத்துவ நிபுணர் பிரியங்கா ரணசிங்க தெரிவித்தார்.  

வரண்ட காலநிலை, கடும் உஷ்ணம் மற்றும் அவை சார்ந்த சுகாதார பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இது தொட்ர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகளாவிய ரீதியில் கொரோனா என்கிற கோவிட் - 19 வைரஸ் தாக்கம் தீவிரமாகப் பரவி வருகின்ற போதிலும் இந்நாட்டில் அதன் பரவுகை மிகவும் குறைவாக இருப்பதற்குத் தற்போது இங்கு நிலவும் கடும் உஷ்ண காலநிலையே காரணம் என்ற கருத்து இந்நாட்டு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.   ஆனால், அக்கருத்தை உறுதிப்படுத்த மருத்துவ அறிவியல் ரீதியிலான எந்தச் சான்றும் கிடையாது. இங்கு இவ்வைரஸ் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதற்கு இங்கு காணப்படும் சிறந்த சுகாதார மருத்துவ பராமரிப்பு தான் அடிப்படைக் காரணம்.

ஆனாலும் நாம் தொடர்ந்தும் விழிப்புணர்வுடனும் முன்னவதானத்துடனும் செயற்பட வேண்டும். இது தொடர்பில் ஒவ்வொருவரும் விஷேட கவனம் செலுத்த வேண்டும்.  

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் இருமும் போது வெளியாகும் சளித்துகள்கள் ஊடாகப் பரவுவதாக நம்பப்படுகின்றது.

அதாவது இவ்வாறு வெளிப்படும் சனித்துகள்கள் காற்றின் ஊடாகவும், ஏனைய பொருட்களிலும் படிய முடியும். அவற்றை சுகதேகிகள் தொடுவதன் ஊடாக அவர்களுக்கு இவ்வைரஸ் தொற்றுவதாக நம்பப்படுகின்றது. அதன் காரணத்தினால் அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்வதின் மூலம் இவ்வைரஸ் தொற்றைப் பெரிதும் தவிர்த்துக்கொள்ளலாம்.

அத்தோடு பொது இடங்களில் இருக்கும் போது கண், மூக்கு, வாய், முகம் என்பவற்றை அடிக்கடி தொடுதல், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்லுதல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.  

அதேநேரம் காய்ச்சல், இருமல், தடிமல், தொண்டை நோ, மூச்செடுப்பதில் சிரமம் போன்றவாறான அறிகுறிகள் தென்பட்டால் தாமதியாது பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

இச்செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர்களான திலக் சிறிவர்தன, இனோக்கா சுரவீர, வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி சிரோமனி சிறிவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.  

மர்லின் மரிக்கார்   

Wed, 03/04/2020 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை