எதிர்க்கட்சி அலுவலகத்திலிருந்து விடைபெற்றார் சஜித் பிரேமதாச

பாராளுமன்றம் கலை க்கப்பட்டதையடுத்து எட்டாவது பாராளுமன்றச் செயற்பாடுகள் முடிவுக்கு வந்திருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுக்காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.  

எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தனது இறுதி ஊடகச் சந்திப்பை நேற்றுக்காலை நடத்திய அவர், கடந்த மூன்று மாத காலப் பகுதியில் தன்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு ஊடகத்துறையினரின் ஒத்துழைப்பையும் பாராட்டினார். சில ஊடகங்கள் தனது விடயத்தில் செயற்பட்ட விதம் குறித்தும் கவலையை வெளிப்படுத்தினார்.  

தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை எதிர்க்கட்சித் தலைவருக்குரிய 27 (2) ஷரத்தின் கீழ் எழுப்பிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரியமுறையில் செவிசாய்க்கத் தவறியதாகவும், முக்கியமான இரண்டு சந்தர்ப்பங்களில் தனது உரைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர், ஒலிவாங்கியை செயலிழக்கச் செய்ததோடு உரை நிகழ்த்தும் போது தொலைக்காட்சியை முடக்கி எனது உரை ஒளிபரப்புவதையும் முடக்கியதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

கடந்த மூன்று மாதகாலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள், வேலையற்ற பட்டதாரிகள் விவகாரம், சுற்றாடல் வன பரிபாலன பிரச்சினைகள், பெண்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், புதிய கொரோனா வைரஸ் தொடர்பான விடயங்கள், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எரிபொருள் விலைகள் தொடர்பாக, பெண்கள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு போன்ற முக்கியமான பலவிடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது அவற்றுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

அத்துடன் உள்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் வெளிநாட்டு படகுகள், மீன் பிடிக்கப்பல்கள் கடற்றொழிலாளர்களுக்கு வாய்ப்பளித்து சுமார் 2இலட்சம் மீனவர்களை நடுத் தெருவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.   IMUL என்று அனுமதி இலக்கத்துடன் கூடிய வெளிநாட்டு மீன் பிடிக்கப்பல்களுக்கு அனுமதி வழங்கி 40ஆயிரம் உள்நாட்டு மீனவர்களை முடக்கியுள்ளனர். ஆறாயிரம் மீன்பிடி படகுகள் சேவையிலீடுபடவில்லை. டிக்கோவிட்ட மீன் பிடித்துறைமுகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை படிப்படியாக அனைத்து கடற்பிரதேசங்களிலும் உள்ள மீன் பிடித்துறைமுகங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.    

எம்.ஏ.எம். நிலாம்   

Wed, 03/04/2020 - 08:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை