'சமபோஷ' கிண்ண உதைபந்தாட்டம் கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன்

கிண்ணியா மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியை 2--1 என்றகோல் கணக்கில் வீழ்த்தி 'சமபோஷ' கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

கொழும்பு குதிரைப் பந்தயதிடல் மைதானத்தில் புதன்கிழமை 11 ஆம் திகதி மாலை இடம்பெற்ற இறுதிபோட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி சமபோச கிண்ணத்தை கைப்பற்றியதுடன் 3 ஆம் 4 ஆம் இடத்திற்கான போட்டியில் கிண்ணியா அல் - அமீன் வித்தியாலயமும் கண்டி சில்வர் ஸ்டார் கல்லூரியும் மோதியது.

இதில் கண்டி சில்வர் ஸ்டார் கல்லூரி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுக் கொண்டதுடன் 4 ஆம் இடத்தை கிண்ணியா அல் - அமீன் வித்தியாலயம் பெற்றுக் கொண்டது.

இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கம் சமபோஷ நிறுவனத்தின் அனுசரணையுடன் வருடா வருடம் தேசிய மட்டத்தில் முன்னணி பாடசாலைகளுக்கிடையில் 14 வயதுப் பிரிவுக்குற்பட்ட மாணவர்களை கொண்ட உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இப்போட்டியை திறம்பட நடாத்திவருகின்றது.

இதன் அடிப்படையில் தேசிய மட்டத்தில் 33 பாடசாலைகளின் அணிகள் இப்போட்டியில் பங்குகொண்டதுடன் சுழற்சி முறையிலான (லீக்) அடிப்படையில் மஹியங்கனை றிஜனல் மைதானத்தில் இடம் பெற்ற இப்போட்டியில் கிண்ணியா மத்தியகல்லூரி அணி பொலன்னறுவை செனவிரத்ன மகா வித்தியாலயத்திற்கு 2-0,கம்பஹா மத்திய கல்லூரிக்கு 3-0,மாவனல்ல சாஹிரா கல்லூரிக்கு 3:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று குழுச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மேலும் விலகல் போட்டியில் கிண்ணியா மத்தியகல்லூரி அணி கொழும்பு ஜனாதிபதி கல்லூரி அணியுடன் மோதி சமநிலையில் முடிவுற்ற நிலையில் தண்டனை உதை மூலம் வெற்றி பெற்றதுடன். யாழ்ப்பாணம் மரக்கந்து மஹாவித்தியாலயத்துடன் இரண்டாவது போட்டியில் 2--1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று அரை இறுதிபோட்டிக்கு தெரிவானது. அரை இறுதிபோட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி கண்டி சில்வர் ஸ்டார் அணியுடன் மோதி 3--1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

கிண்ணியா மத்திய கல்லூரி உதைபந்தாட்ட போட்டியில் தேசிய மட்டத்தில் கடந்த காலங்களில் பலவெற்றிகளை பெற்று முன்னிலை வகிக்கின்ற நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்களான எச்.எம் இபாம்,என். பிரேமச்சந்திரன்,என். நஹீல், பிரியதர்சினி மற்றும் பயிற்றுவிப்பாளர் எம். ஜே.ஆசிக் ஆகியோர் சிறந்த பயிற்சியினை வழங்கிவருவதாக கல்லூரி அதிபர் எஸ்.எம். முஹமட் அனிபா தெரிவித்தார்.

(கிண்ணியா விசேட நிருபர் )

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை