சகல பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை

இன்று முதல் ஏப்.20 வரை பூட்டு;  அரசாங்கம் நேற்று அறிவிப்பு

சர்வதேச பாடசாலைகளுக்கும் விடுமுறை, தனியார் வகுப்புகளுக்கும் தடை

நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசாங்க, தனியார், சர்வதேச பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை முதலாம் தவனைக்கான விடுமுறை வழங்குவதாக கல்வியமைச்சு நேற்று அறிவித்தது.

கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று கல்வி அமைச்சில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் இந்த அறிவிப்பை விடுத்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டில் அச்சுறுத்தலான நிலைமை இல்லாதபோதும் ஜனாதிபதி, பிரதமர், பெற்றோர் மற்றும் ஆசிரிய சங்கத்தினர் கல்வியமைச்சை கேட்டுக்கொண்டதற்கிணங்க முதலாம் தவணை விடுமுறையை வழமைக்கும் முன்னதாக இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். மாணவர்களின் நலன் கருதி கல்வியமைச்சு முன்னெடுத்துள்ள இத்தீர்மானத்தை சர்வதேச பாடசாலைகளும் தனியார் வகுப்புகளும் கவனத்திற்கொள்ள வேண்டுமென கல்வியமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சர்வதேச பாடசாலைகளும் இந்த அறிவித்தலை பின்பற்றுவதாக அறிவித்துள்ளன.

அத்துடன் அனைத்து தரப்பினரும் அத்தீர்மானத்துக்கு இணங்கி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க முன்வந்துள்ளனர்.

அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும் கொழும்பு அதியுயர் மறைமாவட்டம் தீர்மானித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் இரண்டு வார காலத்துக்கு தனியார் வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்துமாறும் விரிவுரையாளர்களின் சங்கம் தனியார் வகுப்பு ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைச்சரின் இந்த வேண்டுகோளையடுத்து வடமாகாணத்திலுள்ள அனைத்து தனியார் வகுப்புக்களையும் மறுஅறிவித்தல் வரை மூடவும் வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்

அமைச்சர் டளஸ் அழகப்பெரும தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

"கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனுக்கு கொரோனா தொற்று இருப்பதாககூறி நேற்று பெற்றோர் பாடசாலையில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தினர். நேற்றைய தினம் சுமார் 60 சதவீதத்திலும் குறைவானவர்களே ஆனந்தாக் கல்லூரிக்கு சமுகமளித்திருந்தனர். அம்மாணவர்களின் பெற்றோரும் தமது பிள்ளைகளை இடைநடுவில் அழைத்துச் செல்ல முற்பட்டாதால் அங்கு வீணான பதற்றம் உருவானது. சமூக வலைத்தளங்களில் சிலர் பொறுப்பின்றி முன்னெடுத்து வரும் செய்திகளே இவ்வாறான பதற்றத்துக்கு காரணமாகியுள்ளன. மாணவர்களை பதற்றத்துக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காகவே முதலாம் தவணை விடுமுறையை முன்கூட்டியே வழங்குகின்றோம்," என்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் விளக்கமளித்ததாவது-

இலங்கையை பொறுத்தவரை கொரோனா குறித்து அச்சப்பட வேண்டிய நிலைமை தற்போதைக்கு இல்லை. இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றுடன் உறுதி செய்யப்பட்டுள்ளார். அவரும் பல இடங்களில் தங்கியுள்ளார். அந்நபர் தங்கிய விடுதிகளில் சேவையாளர்கள் உள்ளனர். அவர்களது பிள்ளைகளும் பாடசாலைகளுக்குச் செல்பவர்களே. இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்கள் காரணமாக நாட்டிலுள்ள 43 இலட்சம் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் வீணான பதற்றத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகக் கூடாது என்பதில் கல்வியமைச்சு உறுதியாக உள்ளது.

ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். பாடசாலையை எப்போது மீள ஆரம்பிப்பது என கல்வியமைச்சு தீர்மானிப்பதற்கு முன்னரே சில வலைத்தளங்களில் பாடசாலை இம்மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப் படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்ததைக் கண்டு நானே அதிர்ச்சிக்குள்ளானேன். இதுபோன்ற ​போலியான தகவல்கள் காரணமாகவே மக்கள் வீணான பதற்றநிலைக்கு உள்ளாக நேரிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை