கொரோனா வைரஸ்: இத்தாலியில் உயிரிழப்பு உச்சம்: இயல்பு வாழ்வுக்கு திரும்புகிறது சீனா

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115,000 ஆக அதிகரித்திருப்பதோடு 4,200 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

குறிப்பாக இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் கடும் நடவடிக்கைகளை அமுல்படுத்தி இருக்கும் இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றினால் 168 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் இத்தாலியில் பரவ ஆரம்பித்தது தொடக்கம் பதிவான அதிக உயிரிழப்பாக இது உள்ளது. இத்தாலியில் 10,149 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த டிசம்பரில் இந்த வைரஸ் தோன்றிய சீனாவில் அது பரவும் வேகம் குறைந்துள்ளது. எனினும் சீனாவில் பல நாட்கள் குறைவடைந்து வந்த வைரஸ் தொற்று நேற்று சற்று உயர்ந்திருந்தது. கடந்த திங்கட்கிழமை 19 பேருக்கு மாத்திரம் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 24 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் தனிநபர்களாலேயே தற்போதும் சீனாவில் அதிக வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக இருக்கும் ஹுபெய் மாகாணத்தில் வர்த்தகங்கள் படிப்படியாக வழமைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டிருப்பதோடு பொதுப் போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண அரசு நேற்று அறிவித்தது.

ஹுபெயில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைபவர்களை கண்காணிக்க சோதனைச்சாவடிக்கள் தொடர்ந்து இயங்குவதோடு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதற்கு அரசு உதவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணத்தில் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த மாகாணத்தில் வைரஸ் தொற்று கணிசமாக வீழ்ச்சிகண்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன் இந்த மாகாணத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அங்கு செவ்வாயன்று 14 பேருக்கு மாத்திரமே புதிதாய் வைரஸ் பதிவாகியுள்ளது.

சீனாவில் 80,778 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் 61,475 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கு 3,158 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மோசமாக பாதிப்புற்றிருக்கும் இத்தாலி முழுவதும் திங்கட்கிழமை முடக்கப்பட்ட நிலையில் அது தொடர்ந்து நீடிக்கிறது. இத்தாலியை ஒட்டி ஐரோப்பாவில் இந்த வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் முதியவர்கள் அதிகமாக உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இத்தாலியில் பலியான 168 பேரில் 77 பேர் 70 முதல் 89 வயதுக்கு உட்பட்டவர்களாவர். 16 பேர் மட்டுமே 50 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள். உலகில் அதிகம் முதியவர்களை கொண்ட நாடாக இத்தாலி இருப்பதால், அந்த நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் கொரோனாவால் மட்டும் இறக்கவில்லை எனவும் அவர்கள் ஏற்கனவே வேறு சில நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் எனவும் இத்தாலி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இத்தாலியை அடுத்து ஐரோப்பாவில் 1,784 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்திருப்பதோடு ஸ்பெயினில் 1,689 பேருக்கு பரவி 36 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை அதிகரித்திருந்தது. ஜப்பானில் 54 சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு அங்கு ஒரே நாளில் அதிக வைரஸ் தொற்று பதிவான தினமாகவும் இது உள்ளது.

மறுபுறம் 242 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பதிவான நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,755 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் மத்திய கிழக்கில் வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரானில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் உயிரிழப்பு 354 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானின் அனைத்து மாகாணங்களிலும் இந்த வைரஸ் பரவி இருக்கும் நிலையில் அந்நாட்டில் சுமார் 9,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக ஈரான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மத்திய கிழக்கெங்கும் இந்த வைரஸினால் மொத்தம் 9,700 க்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவின் நிலை மோசமடைந்திருப்பதோடு அந்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை 1,000ஐ எட்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிவியா மற்றும் துருக்கியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் இந்தோனேசியாவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை