நான்காவது வருடத்தில் காலடி வைத்துள்ள தொடர் போராட்டம்

நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இங்கு வாழும் பல இன மக்களது வாழ்விலும் துன்பங்களை விட்டுச் சென்றுள்ளது.

போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் துன்பங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இழப்புக்களை அதிகம் சந்தித்தவர்களாக முல்லைத்தீவு மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீள்குடி​ேயற்றப்பட்ட நிலையில் தமக்கு ஏற்பட்டஇழப்புகளை ஈடுசெய்ய முடியாது திண்டாடுகின்றனர்.

அங்கவீனர்களாகியவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பலர் தமது இளமை வாழ்வைத் தொலைத்தவர்களாக இன்றும் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இதேசமயம் காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியாமல் பலர் கவலையுடன் வாழ்கின்றனர்.இது வேதனையான விடயம்.

காணாமல் போனவர்களை அவர்களது உறவுகள் பத்து வருடங்களுக்கு மேலாகத் தேடி வருகின்றார்கள்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலம் தொடக்கம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கையிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகள், புனர்வாழ்வு நிலையங்கள் என பல்வேறு இடங்களிலும் தங்களுடைய உறவுகளை தேடி அவர்கள் அலைகின்றனர். காணாமல் போனவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கூட அறிய முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

இலங்கையில் முன்னர் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் 2010 ஆம் ஆண்டு மே மாதம் உண்மையறியும் விசாரணை ஆணைக் குழுவாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC) . உருவாக்கப்பட்டது இது இலங்கையில் 2002 பேச்சுவார்த்தை தோல்வியில் இருந்து 2009 மே வரையான இறுதிக் கட்டப் போர் வரையிலான நடந்த நிகழ்வுகளையும் தோல்விகளையும் முரண்பாடுகளையும் விசாரித்து, அந்த மாதிரி தோல்விகளும் முரண்பாடுகளும் மீண்டும் நடைபெறாதவாறு தடுக்க என அமைக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவானது விசாரணைகளை முன்னெடுத்த போது காணாமல் போனோரின் உறவினர்கள் மிகவும் ஆர்வமாக ஆணைக்குழுவில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். ஆனால் இந்த ஆணைக்குழு மூலம் இவர்களுக்கான தீர்வுகள் நேரடியாகக் கிடைக்கவில்லை.இருந்த போதும் இதனுடாக குறித்த விடயங்கள் தொடர்பாக பரிந்துரைகள் சில முன்வக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் பரணகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த காணாமல்போனோர் ஆணைக்குழுவின் பதவிக் காலமானது 2016 ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2016 ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்த நிலையிலேயே 2016.-08-.12 இது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தக் குழுவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச ஆலோசனைகளை வழங்க சர்வதேச நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம கருத்து வெளியிட்ட போது "முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வர எமக்கு கால அவகாசம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் நாம் கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை என்ன செய்தோம் என்பதை விளக்கி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்தோம். இது முழுமையான அறிக்கை என்று கூற முடியாது. எமக்கு இன்னும் 12 மாத காலம் வழங்கியிருந்தால் நாங்கள் பெரும்பால பிரச்சினைகளுக்கு முடிவினைக் கொண்டு வந்திருப்போம்" என்றார்

இந்த ஆணைக்குழுவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளுக்குஅவர்கள் திருப்தியடையும் முகமாக தீர்வுகளை வழங்கவில்லை.

இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ தரவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. பரணகம ஆணைக்குழு 21000 முறைப்பாடுகளையும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவானது 16000 பேர் காணமல் போயுள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஆணைக்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் வேறுபட்ட தரவுகளைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் இரண்டு அரசாங்கங்களால் இவ்வாறு அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களாலும் எந்த தீர்வுகளும் கிடைக்காத நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் இவ்வாறான ஆணைக்குழுக்கள் மற்றும் அரசின் குழுக்களை நிராகரிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் குதித்தனர். இந்நிலையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை என அனைத்து இடங்களிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017.-03-.08 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவியது. ஏற்கனவே பல ஆணைக்குழுக்களைக் கண்டு ஏமாந்து போன உறவுகள் இந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை வேண்டாம் என்றும் போராடினர்.

போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னைய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இவை அனைத்தும் பலன் தராத நிலையில் போராட்டம் கடந்த 08.-03-.2020 திகதியுடன் 3 வருடத்தை கடந்து நான்காவது ஆண்டிலும் தொடர்கிறது.

முல்லைத்தீவில் தொடர் போராட்டம் ஆரம்பித்து இன்றுவரை தமது உறவுகளைத் தேடிய 16 பெற்றோர் இறந்துள்ளனர். இதேவேளை வடக்கு, கிழக்கில் தமது பிள்ளைகளைத் தேடிய பெற்றோரில் இதுவரை 60க்கு மேற்பட்டவர்கள் இறந்திருக்கின்றனர். இவ்வாறு உறவுகளை பறிகொடுத்த பலர் உயிரிழந்து வருகின்றனர்.அதேவேளை தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறும், நீதி பெற்றுத் தருமாறும் கோரி தொடர்ந்து போராட உள்ளதாக உறவுகள் கூறுகின்றனர்.

இவ்வாறான துன்பங்களின் மத்தியில் தமிழ் அரசியல் தலைமைகள் கூட தமது விடிவுக்காக குரல் கொடுப்பதாக தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

 

சண்முகம் தவசீலன்...

(முல்லைத்தீவு குறூப் நிருபர்)

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை