தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக் கொடுக்கவே கப்பல் சின்னத்தில் போட்டி

அம்பாறையில் வேட்புமனுத் தாக்கலின் பின் கருணா கருத்து

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக் கொடுப்பதற்காகவே கப்பல் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் என கருணா அம்மான் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அறிந்துதான் அம்மக்களுக்கான விடிவை பெற்றுக் கொடுப்பதற்காக நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

வரலாற்றில் முதன் முறையாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் கட்சியில் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் (18) வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அபிவிருத்தியிலும், நில நிருவாக,காணிப் பிரச்சினையில் தத்தளித்துக் கொண்டிருகின்றார்கள். அவ்வாறானவர்களை மீட்டெடுத்து அபிவிருத்தியையும் உரிமையையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

நான் அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக தமிழ் மக்களுடன் நேரடியாக இருந்தும், அவர்களின் காலடிக்குச் சென்று பார்வையிட்டும் அவர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அறிந்துதான் இத் தீர்மானத்தை எடுத்தேன்.

கடந்த 72 வருடங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பேய்க் காட்டினார்களே தவிர தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். மக்களின் காணிகள், நிருவாகம் பறிக்கப்பட்டு தமிழர்கள் அநாதையாக்கப்பட்டார்கள். தமிழர்களின் பிரச்சினைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் பாராளுமன்றிலே பேசப்படவில்லை. இதனால் வெறுப்படைந்த தமிழ்மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பை தூக்கி வீசிவிட்டார்கள்.

நாங்கள் செயற்பாட்டு அரசியலை கைக்கொள்ள வேண்டும். இதுவரையும் தமிழர்களின் அரசியல் என்பது தனிநபர்களின் அல்லது கட்சிகளின் நலன்சார்ந்த தேர்தல்மைய அரசியலாகத்தான் காணப்பட்டது.

நான் பாராளுமன்றம் சென்றால் கோமாரியை மையமாக கொண்ட பிரதேச செயலாளர் பிரிவும், மல்வத்தையை மையமாக கொண்ட பிரதேச செயலாளர் பிரிவும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் பிரிவும் தரமுயர்த்துவதற்கு முன்னுரிமையளிப்பேன்.

இனியும் தமிழ்மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அங்கிகரிக்க வேண்டாம்.

இன்னும் தமிழ்மக்கள் ஏமாந்த சமூகமாக இனியும் இருக்ககூடாது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கப்பல் சின்னத்திற்கு வாக்களித்து என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி காட்டுங்கள்.

சொல்வதை செய்து காட்டுவேன். மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய கப்பலில் தமிழ்மக்கள் ஏறுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மிதக்கும் அரசியல் கப்பலில் தமிழ்மக்கள் ஏறுங்கள். அப்போதுதான் உரிமையுடன் அபிவிருத்தி கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்தார்.

வெல்லாவெளி தினகரன், வாச்சிக்குடா விசேட நிருபர்-கள்

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை