உலகெங்கும் தொடர்ந்து வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்

புதிய கொரோனா வைரஸினால் சர்வதேச அளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,200ஐ தாண்டியிருப்பதோடு 95,300க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

சீன பெருநிலத்தில் மேலும் 139 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இதன்மூலம் அந்நாட்டில் மொத்தம் 80,409 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸின் மையப்புள்ளியாக இருக்கும் வூஹான் நகரில் மாத்திரம் 131 பேருக்கு புதிதாக வைரஸ் பதிவாகியுள்ளது.

சீனாவுக்கு வெளியில் கொவிட்–19 வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் தென் கொரியாவில் நேற்று மேலும் 760 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நாட்டில் மொத்தம் 6,088 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் இந்த வைரஸ் தீவிரமடைந்த நாடாக இருக்கும் இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

இங்கு 3,000க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. மறுபுறம் மத்திய கிழக்கில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஈரானின் அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் பரவியிருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி குறிப்பிட்டுள்ளார். ஈரானில் 2,900 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 92 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 11 ஆக உயர்ந்துள்ளது. நியூயோர்க் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் புதிதாக இந்த வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கலிபோர்னியா மாநில அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இந்த வைரஸுக்கு எதிரான மருந்தினை மேம்படுத்துவதற்காக 8.3 பில்லியன் நிதிக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

வைரஸ் தொற்றினால் அவுஸ்திரேலியாவில் இரண்டாவது உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. சொல்வேனியா, ஹங்கேரி போலந்து நாடுகளில் முதல் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் புதன்கிழமை பதிவாகின. இந்த வைரஸ் சுமார் 80 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை