சிறுபோகத்திற்கான உரத்தை உடன் விநியோகிக்க ஜனாதிபதி பணிப்பு

பற்றாக்குறைக்கு இடம் வைக்காது எதிர்வரும் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தினை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.  

எதிர்வரும் சில தினங்களில் உரத் தொகுதி நாட்டை வந்தடைய உள்ளது. தாமதமின்றி உரத்தினை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி,  விவசாயிகளை ஒருபோதும் அசௌகரியத்திற்குள்ளாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.  

உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

உர இறக்குமதியின்போது எழும் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. விநியோகிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும்  நியமங்களை பரிசீலனை செய்யும் அறிக்கையை 10 தினங்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

விவசாயிகள் அதிக அறுவடையை எதிர்பார்த்து அதிகளவு உரத்தினை பயன்படுத்துகின்றனர். இரசாயன உரங்களை பயன்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவசாய சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, படிப்படியாக கூட்டுரத்திற்கு அவர்களை மாற்ற வேண்டியது பற்றியும் விளக்கினார். அதற்காக விவசாயிகளை தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

கூட்டுரத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் தொடர்பில் மக்கள் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சந்தையில் உள்ள தேவை மற்றும் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைக்கு கூட்டு உர உற்பத்திகளை அதிகரிப்பதனை காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர் நியமங்களுக்கேற்ப உரத்தினை உற்பத்தி செய்யும் நாடுகளை இனங்கண்டு உரம் இறக்குமதி செய்யப்பட வேண்டும். நெற் பயிர்ச்செய்கை உட்பட வருடாந்தம் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் அவற்றின் அளவுகளை சரியாக அறிந்து தேவையானளவு உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.  

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல, உட்பட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். (ஸ)  

Thu, 03/05/2020 - 09:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை