ரவி கருணாநாயக்கவை தேடி சிஐடியினர் நேற்றும் வலை

ரிட்மனு மீது இன்று விசாரணை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவைத் தேடி சிஐடியினர் நான்காவது நாளாக நேற்றும் அவரது வீடுகளுக்குப் படையெடுத்தனர்.

பத்தரமுல்லை மற்றும் கொழும்பு 07 பிரதேசங்களிலுள்ள அவரது வீடுகளுக்கு சிஐடியினர் சென்று தேடியபோதும் அவர் அங்கு இருக்கவில்லை.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை  கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நான்கு நாட்கள் சென்றுள்ளபோதும் அவரை இதுவரை கைது செய்ய முடியாமலிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ரிட் மனு மீது நீதிமன்றில் இன்று விசாரணை

இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி சம்பவங்கள் இரண்டு தொடர்பில் தம்மை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் ரங்க திஸாநாயக்கவினால் விடுக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள நான்கு ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நேற்றைய தினம் அது தொடர்பில் ஆராயப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மேற்படி மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

நேற்றைய தினம் முற்பகல் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி மனு, மேன்முறையீட்டு நீதிபதி ஏ. எச். எம். திலிப் நவாஸ் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுண ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இங்கு மனுதாரர் தொடர்பில் ஆஜராகி இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி மேற்படி மனு அவசரமாகவும் முக்கியமானதாகவும் கருதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினார். மேற்படி மனு தொடர்பில் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு முன் மனுவில் குறிப்பிட்டுள்ளது போன்று இடைக்கால உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்படவேண்டும் என அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதி சொலிசிடர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க தெரிவிக்கையில், இது மக்கள் மிக உன்னிப்பாக நோக்குகின்ற ஒரு விடயம் என்றும் அதற்கிணங்க ஒரு தரப்பு விடயங்களை மாத்திரம் கவனத்திற்கொண்டு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி மனு தொடர்பான அழைப்பாணைw இதுவரை சட்டமா அதிபருக்கு கிடைக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார். அதனைக் கவனத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு அழைப்பாணை விடுக்குமாறு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததுடன் இன்றைய தினம் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுண அலோசியஸ், மத்திய வங்கி அதிகாரி சங்கரப்பிள்ளை பத்மநாதன், பதுகொட ஹேவா இந்திக சமன் குமார ஆகியோரினால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இரண்டு மத்திய வங்கி பிணைமுறி ஏல விற்பனையின்போது அரசாங்கத்திற்கு 50 பில்லியனுக்கு மேல் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட தரப்பினரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மார்ச் 06ம் திகதி அழைப்பாணை விடுத்திருந்தது.

அந்த அழைப்பாணை விடுத்திருந்த முறைமை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அந்த பிடியாணையை செயலற்றதாக்கக் கோரி மேற்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை