ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புகளின் வாபஸ் ஆரம்பம்

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக தலிபான்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமாக ஆப்கானில் இருந்து தமது துருப்புகளை அமெரிக்கா வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி அடுத்த 135 நாட்களுக்குள் தமது துருப்புகளை 12,000 இல் இருந்து 8,600 ஆக குறைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டது.

தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கடந்த பெப்ரவரி 29 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் துருப்புகளை வாபஸ் பெறுவது நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் ஆப்கான் அரசு அங்கம் வகிக்காதபோதும் அது தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளது. இதில் தலிபான்களுடனான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னிபந்தனையாக தலிபான் கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கையை கடைப்பிடிக்கப்போவதில்லை என்று ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரண்டாவது தவணைக்காக பதவி ஏற்ற கானி குறைந்தது 1,000 தலிபான் கைதிகளை விடுவிக்கும் ஆணை ஒன்றை இந்த வாரம் பிறப்பிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் ஹல்மாண்ட் மாகாணத்தில் ஆப்கான் படையினர் மீது தாக்குதல் நடத்திய தலிபான்கள் மீது அமெரிக்க இராணுவம் வான் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த அமைதி உடன்படிக்கை கடந்த வாரம் கேள்விக்குள்ளாகி இருந்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பதற்றத்தை தணிக்கும் அறிவிப்பை தலிபான்கள் வெளியிட்ட நிலையிலேயே முதல்கட்டமாக படைகளை வாபஸ் பெறும் அறிவிப்பை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கான பேச்சாளர் கேர்ணல் சொனி லெகெட் வெளியிட்டார். எனினும் ஆப்கானில் தமது அனைத்து இராணுவ கடப்பாடுகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின்படி 14 மாதங்களுக்குள் அனைத்து துருப்புகளையும் வாபஸ் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ உடன்பட்டுள்ளன.

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை