பலமான எதிர்க்கட்சியை உருவாக்க தேசிய மக்கள் சக்தியுடன் கைகோருங்கள்

 

புதிய சமூக, பொருளாதார முறைமையொன்றை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச்செல்ல பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்க்குமாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சியொன்றை அமைக்க வேண்டும். அதன்மூலம் தான்தோன்றித்தனமாக ஆட்சிக்கு எதிராக குரல்கொடுக்க முடியும். 70 வருடங்களாக மக்களின் அபிலாஷைகளுக்கு செவிக்கொடுக்காத சமகால ஆட்சியாளர்களை தூக்கியெறிந்து புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின்  தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட தேவையான நடவடிக்கைளை எடுத்துள்ளோம்.

இத் தேர்தலில் எமக்கு சில இலக்குகளும் நோக்கங்களும் உள்ளன. நடைபெற்றுள்ள ஆட்சிகள், கடந்த அரசாங்கத்தின் ஆட்சி மற்றும் சமகால ஆட்சியில் எமது நாடு பொருளாதாரம், சமூக ரீதியில் முன்னோக்கிக் கொண்டுசெல்லப்படவில்லை. மக்கள் ஒவ்வொரு முறையும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தான் வாக்களிக்கின்றனர். நாடு சுதந்திரமடைந்த கடந்த ஏழு தசாப்தங்களில் இவர்களால் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாதென நிரூபித்துள்ளனர். இந்த சமூக, பொருளாதார முறைமைகள் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

தேர்தல் மேடைகளில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களுடனும் நாட்டை எத்திசையை நோக்கி கொண்டுசெல்ல வேண்டுமென விவாதிக்க நாம் தயாராக உள்ளோம். ஊழல்களும் மோசடிகளும் மலிந்த சமூக, பொருளாதார முறைமைகளை தொடர்ந்து பின்பற்றுவதா அல்லது சிறந்த சமூகமொன்றையும் அபிவிருத்தியடைந்த பொருளாதாரமொன்றையும் கட்டியெழுப்ப தயாரா என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 03/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை