புனித யாத்திரைகள், சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது

கொரோனா அச்சுறுத்தலைக் கவனத்திற்கொண்டு புனித யாத்திரைகள், குழுவாக சுற்றுலா செல்லுதல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு நாட்டு மக்களும் சம்பந்தப்படும் ஒரு தேசிய செயற்பாடு என்பதால் அதனை சுகாதார அமைச்சால் மட்டும் மேற்கொள்ள முடியாதென்றும் அனைவரதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமென்றும்அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்போது 570 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமான நிலையத்தில் வௌிநாட்டிலுள்ளோர் வந்து இறங்கியதும் அங்கிருந்து பாதுகாப்பாக சொகுசு பஸ்களிலேயே குறிப்பிட்ட முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். விமான நிலையத்தில் சுகாதார துறை அதிகாரிகள், இராணுவத்தினர், விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இணைந்து செயற்பட்டு முறைப்படி பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே அவர்கள் தனிமைப்படுத்தப்படும் முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இலங்கையில் தொழில் அனுமதிப்பத்திரத்தைக்​கொண்டுள்ள 10.000 சீனப் பிரஜைகள் உள்ளனர்.இதுவரை 443 பேரிடமிருந்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அவர்கள் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் தற்போது கொரோனா தொற்று நோயாளிகள் பதிவு குறைந்து வருகிறது. அதேவேளை இத்தாலியில் இது அதிகரித்து வருவதுடன் தென்கொரியாவிலும் படிப்படியாக குறைந்து வருகிறது.

இலங்கையில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம்.

இது முழு நாட்டு மக்களும் சம்பந்தப்படும் ஒரு தேசிய செயற்பாடு என்பதால் அதனை சுகாதார அமைச்சால் மட்டுமே மேற்கொள்ள முடியாது. சுகாதார அமைச்சானது நாட்டிற்குள் மேற்படி தொற்று வராமல் தடுப்பது,இவ்வைரஸ் உருவாகாமல் தடுப்பது, அவ்வாறு ஏற்பட்டால் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என மூன்று கட்டங்களாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

ஏற்கனவே சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த மாணவர்கள் 33 பேர் தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நாட்களில் வெளிநாடுகளிலிருந்து வருவோர் நேரடியாக தத்தமது வீடுகளுக்கு செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர். அது தொடர்பில் அதிகாரிகளுடன் முரண்படுவதையும் காண முடிகின்றது.

சீனா, இத்தாலி போன்று எமது நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்தால் நிலைமை என்னவாகுமென்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அவ்வாறு ஏற்பாட்டால் நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலம் போன்று நிலைமை மோசமாகிவிடும். மக்கள் எங்கும் சென்றுவர முடியாத நிலை ஏற்படும். இத்தகைய நிலையில் அரசாங்கம் இந்தியாவின் புத்தகாயாவுக்கான யாத்திரையை தடைசெய்துள்ளது. சட்டரீதியாக தடைகள் ஏற்படுத்தப்படாவிட்டாலும் வௌி நாடுகளுக்கான புனித யாத்திரைகள் குழுவாக சுற்றுலா செல்லுதல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். செய்தியாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

எதிர்வரும் புதுவருடம் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை