அமெரிக்கா - தலிபான் அமைதி உடன்படிக்கை

ஆப்கானிஸ்தானின் நீண்ட கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான் பிரதிநிதிகளிடையே அமைதி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், கட்டார், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா, உஸ்பகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை டோஹா நகரில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆப்கானில் இருந்து அமெரிக்க துருப்புகள் படிப்படியாக வாபஸ் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.

இதில் ஆப்கானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புகள் வாபஸ் பெறுவதற்கு 14 மாத கால எல்லை நிர்ணயிக்கப்பட்டிருப்பதோடு, அமெரிக்க பாதுகாப்பிற்கு ஆப்கான் அச்சுறுத்தலாக அமையாது என்று தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.

அதேபோன்று ஆப்கான் உள்நாட்டு அமைதி பேச்சுவார்த்தைகள் மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பிக்கவும், நிரந்த மற்றும் உறுதியான யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருவதாக தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி தமது போராட்டத்தை நிறுத்தும்படியும் தாக்குதல்களில் இருந்து விலகிக்கொள்ளும்படியும் தலிபான் தமது போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தலிபான்கள் தமது கடப்பாடுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 14,000 அமெரிக்கத் துருப்புகள் மற்றும் 39 நேட்டோ கூட்டணி மற்றும் நட்பு நாடுகளின் சுமார் 17,000 வெளிநாட்டுத் துருப்புகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளன.

2001 இல் தலிபான் அரசை கவிழ்த்தது தொடக்கம் அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் போராடி வரும் நிலையில் 2018 தொடக்கம் அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை