மலேசியாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் பதவியேற்பு

மலேசியாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் நேற்று பதியேற்றபோதும் பாராளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

“என்னிடமே பெரும்பான்மை இருப்பதை பொதுமக்களிடம் நான் கூறிக்கொள்கிறேன். என்னிடம் 114 இடங்கள் உள்ளன” என்று மஹதிர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார். தமது பெரும்பான்மையை நிரூபிக்க பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பகதான் ஹரபான் கூட்டணியின் பிரதமராக மஹதிர் பதவி வகித்தபோதும் அந்த கூட்டணியின் பிளவுபட்ட குழு ஒன்று தனித்து ஆட்சி அமைக்க முயற்சித்த நிலையில் அவர் தனது பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்தார்.

இந்த அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மலேசிய மன்னர் ஈடுபட்டிருந்த நிலையில் 72 வயதான முஹ்யித்தீனை புதிய பிரதமரான அரச மாளிகை கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, பீ.ஏ.எஸ் மற்றும் மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவற்றைக் கொண்ட கூட்டணியின் அரசொன்றை அமைக்கும் முயற்சியாகவே அவர் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

தமது பகதான் ஹரப்பான் கூட்டணி அரசில் உள்நாட்டு விவகார அமைச்சராக இருந்த முஹ்யித்தீன் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக மஹதிர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மலேசிய அரசியலில் தொடர்ந்தும் ஸ்திரமற்ற சூழல் நீடிப்பதாக அவதானிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் 94 வயதான மஹதிர் மொஹமட் மற்றும் தமது நீண்டகால அரசியல் போட்டியாளரான அன்வர் இப்ராஹிம் இருவருக்கும் இடையிலான பிரதமர் பதவிக்கான இழுபறியே கூட்டணி அரசுக்குள் பிளவு ஏற்படக் காரணமாக இருந்தது.

இந்நிலையில் இந்த இருவரும் இணைந்து மேற்கொண்ட முஹ்யித்தீன் பிரதமராவதை தடுக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை