எம்மை நடுவீதிக்கு கொண்டுவருவதாக கூறியோரும் மொட்டுச் சின்னத்தில் போட்டி

 அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மொட்டு சின்னத்தில் போட்டியிட நாங்கள் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளோம். எம்மை நடுவீதிக்கு கொண்டுவருவதாக கூறியவர்களும் எமது கட்சியில் போட்டியிட முன்வந்துள்ளனரென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

'தினமின' இணை ஆசிரியர் தனுஷ்க கொடகும்புர எழுதிய 'பிரசன்ன' 'பொதுமக்கள் போராட்டத்தில் சொல்லப்படாத கதை' புத்தக வெளியீட்டு விழா வெயாங்கொடை சிட்டி சென்றரில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறுகையில்,

கடந்த நான்கரை வருட போராட்டத்தின் பின்னால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் உள்ளன. ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியான தினம் அதிகாலை 6 மணிக்கே மஹிந்த ராஜபக்ஷவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது. நாட்டை மீட்ட தலைவரை நடத்தும் விதம் குறித்து நாம் கவலைப்பட்டாலும் அவர் சிரித்தவாறு இவற்றுக்கு முகங்கொடுத்தார்.

நாம் கடந்த காலத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தோம். எம்மோடு இருந்தவர்கள் ஒவ்வொருவராக மைத்திரிபால சிரிசேனவுடன் இணைந்தனர்.

மீண்டும் அரசியல் செய்வதற்கான பின்னணியை பெசில் ராஜபக்ஷ தான் உருவாக்கினார். எமக்கு எதிராக பரந்தளவில் அடக்குமுறைகள் தூண்டிவிடப்பட்ட நிலையில்,சு.க தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷ கைவிட்டார். பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிட வேண்டுமென பெரும்பாலானவர்கள் கூறினர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்க மாட்டோம் என்ற அறிவிப்பினால் தான் எமக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றாக பயணம் செய்ய முடியாது.அவரை நம்ப வேண்டாமென அன்று கூறினேன். தனியாக போட்டியிடுமாறு கோரினேன். இருந்தாலும் இணைந்தே போட்டியிட நேரிட்டது.

பசில் ராஜபக்ஷவினாலாயே ஜனாதிபதி தேர்தலில் தோற்றதாக கதை பரப்பப்பட்டது. அவர் சில காலம் அமெரிக்காவில் இருந்தார். அவர் நாடு திரும்பிய போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.அங்கிருந்து கொண்டு தான் புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டது. உள்ளூராட்சி தேர்தலை போன்றே ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றியீட்டியுள்ளோாம்.

பொதுத்தேர்தல் கூட்டணிக்கு இணைத் தலைவர்களை நியமிக்க தயாரான போது, நான் எதிர்த்தேன்.மஹிந்த ராஜபக்ஷவுக்கு இணையாக வேறு தலைவர் நாட்டில் இல்லை.அவர் மட்டுமே கூட்டணி தலைவராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன். எமது போராட்டத்தின் பயணாக மஹிந்த ராஜபக்ஷ தலைவராக நியமிக்கப்பட்டார். மைத்திரிபால சிறிசேன தவிசாளராக நியமிக்கப்பட்டார்.அவரின் பெறுமதியை அறிந்தே 'வெருளி' பற்றிய கதை கூறினேன். நாம் மொட்டு சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுக்களில் கையெழுத் திட்டுள்ளோம்.எம்மை நடுவீதிக்கு கொண்டுவருவதாக கூறியவர்களும் எமது கட்சியில் போட்டியிடுகின்றனர்.

ராஜபக்ஷ குடும்பத்தை அடிக்க அடிக்க அவர்களை மக்கள் காத்து வருகின்றனர். மீண்டும் மஹிந்த யுகமொன்றை உருவாக்க முடிந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ வரும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுந்து நிற்கிறார். ஒருவரை ஒருவர் மதிக்கும் தலைவர்கள் இன்றுள்ளனர்.

இந்த பொதுத் தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்தது. மஹிந்த ராஜபக்ஷவை விட்டுச் செல்லாத குழு எம்முடன் இருக்கிறது என்றார்.

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை