~வடக்கின் போர்; பலமான நிலையில் சென்.ஜோன்ஸ்

'வடக்கின் போரி' இன் முதல்நாள் முடிவில் 118 : 3 என யாழ்.சென்.ஜோன்ஸ் அணி பலமான நிலையில் உள்ளது. எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான மூன்று வீரர்கள் வீணாக ரன்அவுட் ஆக, யாழ்ப்பாணம் மத்தியின் துடுப்பாட்டம் மொத்தமாக சரிந்தது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான 'வடக்கின் போர்' கிரிக்கெட் சமரின், 114 ஆவது போட்டி நேற்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் நாகேந்திரராஜா சௌமியன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதற்கிணங்க முதலில் களமிறங்கிய யாழ்பாணம் மத்திய கல்லூரி அணி, 6ஆவது பந்து பரிமாற்றத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ரன்அவுட் ஆகினர். என்.திவாகரன் 2 ஓட்டங்களுடனும் கே.இயலரசன் 9 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய எம்.சஞ்சயன் எஸ்.சாரங்கன் ஜோடி அணியை சற்று தூக்கி நிறுத்த முயற்சித்தது. அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரன்அவுட் எமன் யாழ்ப்பாணம் மத்தியை மீண்டும் அணைத்து, சாரங்கனையும் 25 ஓட்டங்களுடன் தூக்கிச் சென்றது.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சற்று பலமடைய எத்தணித்த நிலையிலும், சீரான இடைவெளியில் விக்கெட்கள் சாய்க்கப்பட்டன.

சஞ்சயன் 20 ஓட்டங்களையும், ஏ.நிதுசன் 20 ஓட்டங்களையும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வி.விஜஸ்காந்த் 30 ஓட்டங்களையும் என நடையைக் கட்டினர்.

இறுதியில் நம்பிக்கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்.ராஜ்கிளிண்டனும் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.இறுதியில் 57.3 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு யாழ்ப்பாணம் மத்தி சகல விக்கெட்களையும் இழந்தது.

பந்துவீச்சில் கே.கரிசன் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், யோ.விதுசன் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஏ.அபிசேக், தெ.டினோசன் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். யாழ்ப்பாணம் மத்தியின் மூன்று ரன்அவுட்களும் கே.சபேசனால் நிகழ்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து முதலாவது இனிங்ஸிற்காக ஆடக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் அணி, முதல் விக்கெட்டை 16 ஓட்டங்களை பெற்றபோது இழந்தது. கி.தனுஜன் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கி ஏ.சுகேதன் ஒரு முனையில் நிலைத்து நின்றார். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் சௌமியன் 16 ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

பொறுப்பாக ஆடிய சுகேதன், அரைச்சதம் கடக்க முடியாமல் 49 ஓட்டங்களுடன் வெளியேறினார். முதல்நாள் ஆட்டநேரம் முடிவின் போது, சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 30 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. களத்தில் தி.வினோஜன் 19 ஓட்டங்களுடனும், தெ.டினோசன் 24 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

வீழ்த்தப்பட்ட விக்கெட்களில் இரண்டு தீ.விதுசனும், மற்றயதை வி.விஜஸ்காந்தும் கைப்பற்றியிருந்தனர். போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

யாழ். விளையாட்டு நிருபர்

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை