முஸ்லிம் தலைமைகளை ஒன்றிணைக்க முயற்சி ; ஹக்கீம், ரிசாத் தரப்பு ஆராய்வு

அதாவுல்லா நிராகரிப்பு

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என முஸ்லிம் கட்சிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை என அறியவருகிறது. அதேவேளை முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் நேற்று மாலைவரை எந்த முடிவையும் எட்டியிருக்கவில்லை. இதேவேளை தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் இன்று மாலை தீர்மானமொன்று எட்டப்படலாம் என இரு கட்சிகளினதும் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க  அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து இணைந்த கூட்டணியாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற அவசியத்தை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்சாலி வலியிறுத்தி வருகின்ற நிலையில் அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும் அவ்வாறு கூட்டணி அமைக்கப்பட்டால் அக்கூட்டணியில் தாம் இணைந்துகொள்ளப் போவதில்லையென்றும் தாம் தனித்தே போட்டியிடப் போவதாக தேசிய காங்கிரஸின் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் நாடு திரும்பியதுமே அவரது முடிவை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் இதுவரை எந்த முஸ்லிம் கட்சிகளும் தாம் தனித்து அல்லது கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பில் தீர்க்கமான முடிவெதையும் நேற்றுவரை அறிவித்திருக்கவில்லை.

நேற்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது, இன்று பிற்பகலுக்குப் பின்னர் முடிவு எட்டப்படலாம் என நம்பிக்கை வெளியிட்டனர்.

இதே வேறு தமிழ்,முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதை தான் வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

முஸ்லிம் தலைமைகள் இணைந்து போட்டியிட வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவுச் சூழல்களுக்கு மத்தியில் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து,பொது அணியில் போட்டியிட முன்வரவேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஸாத்சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் (07) ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் சமகால அரசியல்பற்றி தெளிவு படுத்தியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.இங்கு கருத்து தெரிவித்த அசாத்சாலி,நாட்டின் புதிய அரசியல் கலாசாரச்சூழலில் பிரதான தேசிய கட்சிகளுடன் (ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன) இணைந்து முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுவது பலனளிக்காது. சமூகத்தின் பிரதிநிதித்துவங்களையும் ஏனைய சமூகங் களின் பிரதிநிதிகளையும் வென்றெடுப்பதற்கான புதிய வியூகங்கள்தான் சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்கும்.குறிப்பாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் உள்ள மாவட்டங்களில் முஸ்லிம் களை முதன்மைப்படுத்தியும் ஏனைய மாவட்டங்களில் சகோதர சமூகங்களை பிரதானப்படுத்தியும் வேட்பாளர்களை நிறுத்துவதே சிறந்த சாணக்கியமாக அமையும். இது குறித்து முஸ்லிம் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.ஐக்கிய தேசி கட்சி பிளவுபட்டுள்ள இன்றைய சூழலில் ரணிலைக் காப்பற்றவோ அல்லது சஜித்தை காப்பாற்றுவது பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியம் முஸ்லிம் தலைமைகளுக்கில்லை.இதேபோன்று அதிகாரத்திலுள்ளவர்களின் மனநிலைகள் பற்றியும் நாம் சிந்திப்பதே சிறந்த ராஜதந்திரமாகவுள்ளது.

இங்குள்ள சிலரின் கண்டுகொள்ளாத போக்குகளும் சிறுபான்மைத் தலைவர்களை தனித்துப்போட்டியிடுமாறு கூறப்படும் ஆலோசனைகளும் இணக்கப்பாட்டு அரசியலைத் தனிமைப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் தனித்துப் போட்டியிட்டு சமூகப் பலங்களைப் பேரம்பேசும் சக்தியாக மாற்றுவதுதான் முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ள ஒரேவழியாகும்.இவற்றைப்புரிந்து கொண்டு அவசரமாக முஸ்லிம் கட்சிகள் தேசிய ஐக்கிய முன்னணியிலோ அல்லது எந்த அணியிலோ ஒன்றுபட வேண்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் சிந்தனைகளுக்கு உயிரூட்ட முன்வருவது காலத்தின் தேவையாகும்.இவற்றைச் செய்யத் தவறின் சகல மாவட்டங்களிலும் தேசிய ஐக்கிய முன்னணி தனித்துக் களமிறங்கும்.வெற்றிக்காக இல்லாவிடினும் எதிர்கால இலட்சியங்களுக்கான அடித்தளமாக இப்பொதுத் தேர்தலை தேசிய ஐக்கிய முன்னணி பயன்படுத்தும் என்றும் அசாத்சாலி குறிப்பிட்டார்.

தேசிய காங்கிரஸ் இணையாது

மரம் நடும்போது நன்மை தரும் மரங்களையே நடவேண்டுமேயன்றி நஞ்சு தரும் மரங்களை நடக்கூடாதெனவும் எம்.பிக்களைப் பெறுவதற்காக தவறான தலைமைகளுடன் கூட்டணியமைக்க முடியாதென்றும் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.இறக்காமத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் இறக்காம பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி கே.எல் சமீம் உட்பல பலர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டது பற்றி நடாத்தப்பட்ட இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய தேசிய காங்கிரஸ் தலைவர் கூறியதாவது,

சந்தர்ப்பவாதக் கூட்டுக்கள், கொள்கைகள் ஒரு போதும் சமூகத்துக்கு விமோசனம் தராது. எம்.பிக்களை அதிகரிக்கவும் சிலர் எம்.பியாவதற்குமே சிலருக்கு முஸ்லிம் கூட்டமைப்புத் தேவைப்படுகிறது. சாதிக்க வேண்டுமானால் எம்.பிதான் தேவையென்பதில்லை.

பாராளுமன்றத் தேனீர்ச்சாலைகளில் சாப்பிடுவதற்கும், தேனீர் குடிப்பதற்குமான எம்பிக்களைத் தெரிவு செய்யத் தேவையில்லை. நாட்டுக்குப் பொதுவான அரசியல்யாப்பை உருவாக்க வேண்டியுள்ளதால் இதுபற்றிச் சிந்திக்கும் தூரநோக்குள்ள எம்பிக்களே எமக்குத் தேவைப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றிபெற்றிருந்தால் எமது கிழக்கின் வளங்கள் உட்படநாட்டின் வளங்களை வௌிநாடுகள் சூறையாடியிருக்கும். இதைத்தடுப்பதற்கே தேசிய காங்கிரஸ் வியூகம் வகித்தது.இதனால் பழுத்த அனுபவமுள்ள பிரதமரதும் துணிச்சலுள்ள ஜனாதிபதியையும் தெரிவு செய்ய முடிந்துள்ளது.தீர்க்கதரிசனம் விசுவாசம் நாட்டுப்பற்று, சமூகப்பற்று இருந்தால் எதையும் சாதிக்கலாம். பெருந்தலைவர் அஷ்ரஃப் இவற்றை வைத்துத்தான் அதிகம் சாதித்தார். நாட்டைப்பற்றி, மக்களைப்பற்றி, சமூகத்தைப்பற்றிச் சிந்திப்பவர்காளக இருந்தால் கூட்டுச் சேர்வது மட்டுமல்ல எமது வெற்றிகளை விட்டுக் கொடுக்கவும் தயாராகவுள்ளோம். அதாஉல்லாவுக்கு பாராளுமன்றம் புதிதல்ல. அமைச்சுப்பதவிகள் தேவைப்பட்டதுமல்ல.சமூகத் தலைவர்களாக நடிக்கும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்களையும் தலைமைகளையும் தோற்கடிப்பதே அதாஉல்லாவுக்கு தேவையாகவுள்ளது.

பெருந்தலைவர் அஷ்ரஃபின் சத்திய வாக்கை மீறி ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்த சில முஸ்லிம் தலைமைகள் இன்று சீரழியும் நிலைக்குச் சென்றுள்ளன.ஐக்கிய தேசிய கட்சியே அழிந்து உருக்குலையும் நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.

சத்தியம் வெல்லுமென்பதற்கு இதுதான் உதாரணம்.தேசிய காங்கிரஸின் சத்தியம் வெல்லும் வரை பொறுமையாக இருந்தோம்.இன்று கிழக்கின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலிருந்தும் மக்கள் சாரி,சாரியாக தேசிய காங்கிரஸை நாடி வருகின்றனர். இதை எமது சமூகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.

இறக்காமம் பிரதேசத்திற்கு அதிகம் செய்ய வேண்டியுள்ளது.

இப்பிரதேசத்து தாய்மார்கள் சுகப்பிரசவத்துடன் குழந்தை பெற்றெடுக்க தரமான வைத்தியசாலை வேண்டும். சுற்றுலா நீதிமன்றம், தனியான கல்வி வலயம் என்பவற்றை அமைப்பதற்கான திட்டங்கள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ராஜகிரிய குறூப் நிருபர்

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை