மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டி: 6 ஓட்டங்களால் த்ரில் வெற்றியீட்டிய இலங்கை

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 3-–0 என வைட் வொஷ் செய்தது.பல்லேகலவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி மீண்டும் ஒருமுறை துடுப்பாட்டத்தில் சோபித்ததோடு அஞ்சலோ மெத்திவ்ஸ் முக்கியமான தருணங்களில் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஓட்டங்களை கட்டுப்படுத்தியும் இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் இலங்கை இரண்டாவது முறையாக மேற்கிந்திய தீவுகளை ஒருநாள் தொடர் ஒன்றில் வைட் வொஷ் செய்துள்ளது. இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டும் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை முழுமையாக தோற்கடித்தது.

ஏற்கனவே 2-–0 என தொடரை கைப்பற்றிய நிலையிலும் இலங்கை அணி இந்தப் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாத பதினொரு வீரர்களை களமிறக்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்துவீச்சாளர் கீமோ போலுக்கு பதில் சுழல் பந்துவீச்சாளர் ஹேய்டன் வோல்ஷ் அழைக்கப்பட்டிருந்தார்.

மந்தமான பல்லேகல ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்கு 62 பந்துகளில் 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டனர்.

எனினும் கடந்த போட்டியில் அபார சதம் பெற்ற பெர்னாண்டோ 29 ஓட்டங்களிலும் கருணாரத்ன 44 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழந்த பின் இலங்கை சற்று பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் 3ஆவது விக்கெட்டுக்கு இணைந்த குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் 89 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இந்தத் தொடரில் சோபித்து வரும் குசல் மெண்டிஸ் தனது 17 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். 48 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 55 ஓட்டங்களை பெற்றார்.

மறுமுனையில் குசல் பெரேரா 55 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் கொட்ரலின் பந்துக்கு முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் ஏனைய வீரர்கள் இலங்கை அணி வலுவான ஓட்டங்களை பெற உதவினர்.

தனஞ்சய டி சில்வா 45 பந்துகளில் தனது அரைச்சதத்தை பெற்றதோடு அவர் திசர பெரேராவுடன் சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார்.

அல்ஸாரி ஜோசப் இந்த இணைப்பாட்டத்தை முறியடித்து தனஞ்சய டி சில்வாவை ஆட்டமிழக்கச் செய்தார். திசர பெரேரா 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் இலங்கை அணி ஏற்கனவே வலுவான ஓட்டங்களை எட்டி இருந்தது.

இதன்படி 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றது. பல்லேகல மைதானத்தில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாக இது இருந்தது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் அல்ஸாரி ஜோசப் 10 ஓவர்களுக்கும் 65 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவரது நான்காவது சிறந்த பந்துவீச்சாகும்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்தி தீவுகள் அணிக்கு ஷேய் ஹோப் மற்றும் சுனில் அம்ப்ரிஸ் வலுவான ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 111 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

ஷேய் ஹோப் 88 பந்துகளில் 72 ஓட்டங்களுடனும், அம்ப்ரிஸ் 60 பந்துகளில் 60 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்த பின்னர் முதல் வரிசையில் வந்த நிகொலஸ் பூரனும் 61 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணி தனது விக்கெட்டுகளை காத்துக்கொண்டபோதும் அந்த அணியால் தேவையான வேகத்திற்கு ஏற்ப ஓட்டங்களை பெறமுடியாமல் போனது. இதனால் அந்த அணி கடைசி 10 ஓவர்களுக்கு 89 ஓட்டங்களை பெறவேண்டிய நெருக்கடிக்கு முகம்கொடுத்தது.

இதன்போது அணித்தலைவர் கிரன் பொலார்ட் அதிரடியாக ஆட முயன்றபோதும் 50 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்ற அவர் மெத்திவ்ஸின் பந்துக்கு பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் பின்வரிசையில் வந்த பெபியன் அலன் கடைசி ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி நம்பிக்கை தந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி நான்கு ஓவர்களுக்கும் 48 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தபோது அவர் சிக்ஸர்களையும் பௌண்டரிகளையும் விளாசினார்.

இதனால் அந்த அணி கடைசி ஓவருக்கு 13 ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டது. மெத்திவ்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்துக்கு பெபியன் அலன் பௌண்டரி ஒன்றை விளாசி அதிர்ச்சி கொடுத்தபோதும் இரண்டாவது பந்தை அவர் பௌண்டரியை நோக்கி உயர்த்தி அடிக்க முற்பட்டபோது குசல் மெண்டிஸ் எல்லைக் கோட்டில் வைத்து அபாரமாக பிடியெடுத்தார். இதன் மூலம் 15 பந்துகளுக்கு முகம்கொடுத்த பெபியன் அலன் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின் இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்களையே பெற்றது.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் 4.3 ஓவர்களே பந்துவீசி உபாதைக்கு உள்ளான நிலையில் அதனை ஈடு செய்வதற்கு அணித்த தலைவர் திமுத் கருணாரத்ன 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டி இருந்தது.

எனினும் அனுபவ வீரர் மெத்திவ்ஸ் 10 ஓவர்களும் பந்துவீசி 59 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்மூலம் அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இலங்கை சார்பில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சோபித்த வனிந்து ஹசரங்க தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை மண்ணில் மற்றொரு தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் எந்த ஒருநாள் போட்டியிலும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்து இலங்கையுடன் இரண்டு ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி-20 போட்டி எதிர்வரும் புதன்கிழமை (04) இதே பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை