கொரோனா தொற்று 59 ஆக அதிகரிப்பு

நேற்றும் 9 பேர் இனங்காணல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 9 பேர் நேற்று அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மேற்படி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இராஜகிரியவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 9 பேர் நேற்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். அதற்கிணங்க இலங்கையில் 59 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் 200 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 42-50 இற்கு இடைப்பட்ட வயதினர் 45.2 சதவீதமாகவும் 41,-45 இற்கு இடைப்பட்ட வயதினர் 42.1 சதவீதமாகவும் உள்ளனர். இதில் பெண்கள் 19 சதவீதமாகும்.

2 வெளிநாட்டவர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த 25 இலங்கையர்களுக்கும்​ இத்தாலியிலிருந்து வருகைதந்த 22 பேருக்கும், பிரித்தானியாவிலிருந்து வருகைதந்த 2 பேருக்கும், இந்தியாவிலிருந்து வருகைந்த ஒருவருக்கும் கொரோனா நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

முல்லேரியா, வடகொழுப்பு வைத்தியசாலைகள் மற்றும் வெலிக்கந்தையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வைத்தியசாலையிலும் கொரோனா தொற்றுக்கு உட்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படவுள்ளது என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் நேற்று வரை ​9ஆயிரத்து 278 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வைரஸ் தொற்று காரணமாக 2 இலட்சத்து 25ஆயிரத்து 647பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 85 ஆயிரத்து 831பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரானில் நேற்று புதிதாக 149பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹூபெய் மாகாணத்தில் நேற்றைய தினம் எவரும் இனங்காணப்படவில்லை.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை