கொரோனா தொற்று 50 ஆக அதிகரிப்பு

தனியார் வைத்தியசாலைகளிலும் நேற்றுமுதல் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 8 பேர் நேற்று அடையாங்காணப்பட்டுள்ளதால் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. தனியார் வைத்தியசாலைகளிலும் நேற்றுமுதல் கொரோனா வைரஸ் தொடர்பிலான பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியது.

சுற்றுலா மற்றும் யாத்திரைகள் மேற்கொள்வது இரண்டுவாரங்களுக்கு முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.

இராஜகிரியவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கருத்து வெளியிடுகையில்,

முழு நாட்டையும் முடக்கி கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவ்வாறு செய்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டால் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும், நாட்டின் பெரும்பாலானோர் கூலி தொழில் மூலமான வருமானத்திலேயே வாழ்க்கை நடத்துகின்றனர்.

மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதமானவர்கள் சமுர்த்தி பயனாளிகள். தேவை ஏற்படின் மேலதிக தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கும்.

நேற்றைய தினம் புதிதாக 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் இத்தாலியிலிருந்து, ஒருவர் இந்தியாவிலிருந்தும், 3 பேர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்களாவர். வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டுள்ளவர்களுக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மக்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கும் வகையிலான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்காது. நாடு முழுவது 24 வைத்தியசாலைகள் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ளன. இந்த வைத்தியசாலைகளில் தனி வாட்டுகளும், வைத்தியர் மற்றும் பணியாளர் குழாமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் யாத்திரைகளை முழுமையாக இரண்டு வாரங்களுக்கு தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,

நேற்று இனங்காணப்பட்ட 8 பேருடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. 212 பேர் தொற்று சந்தேகத்தின் பேரில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்றுமுதல் கொரோனா வைரஸ் தொடர்பிலான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைக்காக 6000 ரூபாவுக்கு அதிகமான நிதியை அறவிட முடியாது. பரிசோதனை அறிக்கையை 24 மணித்தியாலத்துக்குள் வழங்க வேண்டும். பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் பரிசோதனையை மேற்கொள்பவர் தொடர்பில் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அறிக்கையொன்றை அனுப்ப வேண்டும் என்பதுடன், பரிசோதனையின் பின்னரும் அறிக்கையொன்றை அனுப்ப வேண்டும்.

இங்கிலாந்தில் இருந்துவந்த ஒருவர் தனியார் வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர் வீட்டிலிருந்து சிகிச்சைப்பெற முற்பட்டுள்ளார். இவை மிகவும் அபாயகரமானது. அதன் காரணமாகவே தனியார் வைத்தியசாலைகளில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதியளிக்கவில்லை.

அத்துடன், தனியார் வைத்தியசாலைகள் அறிக்கையை பெற்றுக்கொடுக்க 3 நாட்கள்வரை எடுக்கின்றன. இக்காலப்பகுதியில் நோய் தொற்றுக்கு ஒருவர் உள்ளானவர் என அடையாளம் காணப்பட்டால் அங்கு உள்ளவர்களும் அது பரவியிருக்கக் கூடும். ஆகவே, தனியார் வைத்தியசாலைகள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை