உலகெங்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 3000ஐ தாண்டியது

சீனாவுக்கு வெளியில் வேகமாக பரவல்

புதிய கொரோனா வைரஸினால் சர்வதேச அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளதோடு இந்த வைரஸ் மேலும் பல நாடுகளுக்கு பரவியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதல் முறை தோன்றிய இந்த வைரஸ் தற்போது 60க்கும் அதிகமான நாடுகளில் 88,000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றியுள்ளது.

சீனாவுக்கு வெளியில் தென் கொரியாவில் அதிகம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதோடு நேற்று மேலும் சுமார் 500 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி அந்நாட்டில் மொத்தம் 4,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய வைரஸ் பாதிப்புக் குறித்த அச்சம் அதிகரித்திருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முக்கிய செயற்கை சுவாசக் கருவிகளை கையிருப்பில் வைத்திருக்கும்படி அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அது உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்துள்ளது. இது 2008 நிதி நெருக்கடிக்குப் பின் சர்வதேச சந்தை தனது மோசமான நிலையை பதிவு செய்யும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவில் பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சீன பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வைரஸ் தாக்கிய நாடுகளுக்கு பயணக் கட்டுப்படுகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் என்று ஏனைய நாடுகளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகம் செய்து வருகின்றன.

இதில் உலகின் அதிகம் பேர் வருகை தரும் பிரான்ஸ் தலைநகரில் உள்ள லோவ்ரே அருங்காட்சியக ஊழியர்கள் வைரஸ் அச்சம் காரணமாக பணியாற்ற மறுத்ததை அடுத்து அந்த அருங்காட்சியகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. இது வைரஸ் பற்றிய அச்சம் உலகெங்கும் அதிகரத்திருப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

சீனாவில் நேற்று இந்த வைரஸினால் மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஹுபெய் மாகாணத்திலேயே அனைத்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரான வூஹானில் இருக்கும் காட்டு விலங்கு சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றி இருப்பதாக நம்பப்படுகிறது.

சீனாவில் இதுவரை வைரஸினால் மொத்தம் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபுறம் சீனாவுக்கு வெளியிலும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஈரானில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே சுகாதார பிரச்சினைகள் இருப்பவர்களிடமே இந்த வைரஸ் அதிகம் தாக்கம் செலுத்துவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதன் உயிரிழப்பு வீதம் 2 தொடக்கம் 5 ஆக பதிவாகியுள்ளது. இது காய்ச்சலினால் உயிரிழக்கும் 0.1 வீதத்தை விடவும் மிக அதிகம் என்றபோதும் மற்றொரு கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சார்ஸின் உயிரிழப்பு வீதமான 9.5 ஐ விடவும் குறைவாகும். 2002–2003 இல் பாதிப்பை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸினால் சுமார் 800 பேர் உயிரிழந்தனர்.

மறுபுறம் புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவை விடவும் வெளிநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனா இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஹுபெயின் சுமார் 56 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தியது உட்பட் கடும் நடவடிக்கைகளால் தற்போது அங்கு வைரஸ் தொற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

வெளிநாட்டில் வேகமாக பரவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை வைரஸ் தொற்று அதிகரித்திருந்தபோதும் நேற்று சீனாவில் 202 புதிய வைரஸ் தொற்று சம்பவங்களே பதிவாகின. கடந்த ஜனவரி பிற்பகுதி தொடக்கம் மிகக் குறைவான வைரஸ் தொற்று பதிவான தினமாக இது இருந்தது.

இதற்கு மாறாக சீனாவுக்கு வெளியில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

தென் கொரியாவில் மேலும் நால்வர் உயிரிழந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். இது முதல் காலாண்டில் பாதகமாக வளர்ச்சியை காண்பிக்கும் என்று தென் கொரிய மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

எனினும் தென் கொரியாவில் இந்த வைரஸ் தொற்றுக்குக் காரணமான சின்சோன்ஜி கிறிஸ்தவ சமூகத்தின் 260,000க்கும் மேற்பட்டவர்கள் மீது மருத்துவ சோதனை மேற்கொள்ளப்படவிருக்கும் நிலையில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வார இறுதியாகும்போதும் இத்தாலியில் வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த நாட்டில் சுமார் 1,700 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இந்தோனேசியாவில் இரு கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் முதல் முறை பதிவாகியுள்ளது. செக் குடியரசு, ஸ்கொட்லாந்து மற்றும் டொமினிக்கன் குடியரசில் முதல் கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் கொவிட்–19 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தொற்றிய இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். வொஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவருக்கு ஏற்கனவே சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த முதல் நபரும் அதே மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

மறுபுறம் பிரான்சில் இதுவரை 130 பேருக்கு கொவிட்–19 வரைஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் அதனால் உயிரிழந்துள்ளர்.

பிரான்சின் சில பகுதிகளில் 5,000க்கும் மேலானோர் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சமய நிகழ்ச்சிகள், மரதன் ஓட்ட நிகழ்ச்சி போன்றவை ரத்துசெய்யப்பட்டன.

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை