ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த 2/3 பெரும்பான்மையை தாருங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கரத்தைப் மேலும் பலப்படுத்தவும்  மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் சக்திமிக்க பாராளுமன்றத்தை அமைக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அமைப்பாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.  

கல்நேவையில் நேற்று முன்திம் இடம்பெற்ற பொதுத் தேர்தல் சம்பந்தமான மக்கள் சந்திப்பு நிகழ்வுவொன்றின் போதே  முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

மேலும் உரையாற்றும் அவர்,  

எமது வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது. 113உறுப்பினர்களை பெற்றால் எமக்கு ஆட்சியமைக்க முடியும். தற்போது எமக்கு இலேசாக 125உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடியும். என்றாலும் புதிய விடயங்களை சேர்த்துக் கொள்ளவும் நாட்டுக்கு தேவையற்ற விடயங்களை நீக்கவும் ஜனாதிபதியின் கொள்கைகள் திட்டங்களை எவ்வித பிரச்சினைகளுமின்றி நடைமுறைப்படுத்தவும் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் தேவை. அதற்கு நாம் 150உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள வேண்டும். 

அநுராதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் நாம் ஐந்து உறுப்பினர்களை பெற்றுக் கொண்டோம். ஐக்கிய தேசிய கட்சியினர் நான்கு உறுப்பினர்களை பெற்றுக் கொண்டனர். அதனை இம்முறை நாம் ஏழு உறுப்பினர்களாக அதிகரிக்க வேண்டும்.அதைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு உறுப்பினரையாவது அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக நாம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களையும் இணைத்து செயல்பட வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். எமக்கு நீலம், பச்சை, சிவப்பு என்ற வேறுபாடு அவசியம் இல்லை.  

ஜனாதிபதி தொழில் வாய்ப்பு இல்லாத ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க கட்சியைப் பார்க்கவில்லை. எவராக இருந்தாலும் தகுதியானவர்களுக்கு வழங்கவே ஜனாதிபதி பிரதேச செயலக மட்டத்தில் நேர்முகப் பரீட்சையை நடாத்தினார். வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில்வாய்ப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கும் கட்சி பாகுபாடு பார்க்கவில்லை. எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தகுதியானவர்களுக்கு வழங்கவே ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.   

எனவே நாட்டை கட்டியெழுப்ப நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் என்ற ஒரு பகுதியினரும், நாட்டை நேசிக்காத நாட்டை நேசிக்காதவர்கள் என ஒரு பகுதியினருமே உள்ளனர்.எனவே நாம் அனைவரும் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த இந்த தேர்தலில் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.    

(கல்நேவ தினகரன் விசேட நிருபர்) 

Tue, 03/17/2020 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை