நிர்வாக இடையூறை களைய 2/3 பெரும்பான்மை அவசியம்

மக்கள் பணிக்கு பெரும் தடை; 19 நீக்குவதை தவிர வேறு வழியில்லை

பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தினூடாக, நாட்டை நிர்வகிக்க முடியாமல் ஏற்படுத்தப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்றுத் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஒன்று, பொது மக்களுக்குப் பணியாற்றுவதற்கான இடையூறுகளைக் களைவதாகுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக தடை ஏற்படுத்தப்பட்டதனால், கடந்த ஆட்சியாளர்களை மக்கள் தூக்கியெறிந்தார்களென தெரிவித்த அவர், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மீது, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வீணடிக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பகல் (05) நடைபெற்ற ஊடக மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதற்கான நோக்கம் என்னவென ஜனாதிபதியிடம் கேள்வி தொடுக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "மக்களால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு நாட்டை நிர்வகிப்பதற்குத் தடை இருக்குமானால், அதன் அர்த்தம் என்ன? நிறைவேற்றதிகாரமும் சட்டவாக்கமும் கலந்திருப்பதால், நாட்டை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது"

"அவ்வாறென்றால், 18ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டுவரும் நோக்கம் இருக்கிறதா? என்று கேட்டதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, "நாட்டை நிர்வகிக்கும் தவணைகளில் சில மாற்றங்களைச் செய்யலாம். மக்களுக்கு சேவையாற்றும் சூழ்நிலை இருக்க வேண்டும்" என்றார்.

"பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் விடயமும் உள்ளடங்கியுள்ளதே!" என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, "சுயாதீனம் என்றால், சுயாதீனமான நிலை முழுமையானதாகப் பேணப்பட வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சிலர் தன்னிச்சையாக செயற்பட்டிருக்கிறார்கள். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட வேண்டியதன் அர்த்தம் என்ன? ஒரு பொலிஸ் மாஅதிபர் என்பவர், சுமார் முப்பத்தெட்டு ஆண்டுகால சேவையின் பின்னரே அந்தப் பதவிக்கு உயர்த்தப்படுகிறார். அவர் எத்தனையோ அரசாங்கங்களின் கீழ் பணியாற்றியவராக இருப்பார். எந்த ஆட்சிக் காலத்தில் பொலிஸ் துறையில் சேர்ந்தாரோ ?தெரியாது. அவ்வாறான ஒருவர் மீது நம்பிக்கை இல்லாமலா சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படுகிறது. அந்தக் குழுவை நியமிப்பதும் அரசாங்கம்தானே! எனவே, பொலிஸ் மாஅதிபர் ஒருவர் சுயாதீனமாகச் செயற்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். எதுவானாலும் நாட்டின் நலனுக்காக இருக்க வேண்டும்" என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விசு கருணாநிதி

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை