மகளிர் டி20 உலகக் கிண்ணம்: 5ஆவது முறை ஆஸி. சம்பியன்

மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5ஆவது முறையாக அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டம் வென்றது.

மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78, ஹீலி 75 ஓட்டங்கள் எடுத்தனர்.

இதனையடுத்தது 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. நடப்பு உலகக் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த இளம் மங்கை ஷபாலி வர்மா 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதேபோன்று ஸ்மிருதி மந்தனாவும் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 33 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களையே எடுத்தது. இதனையடுத்து 5ஆவது முறையாக அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஆட்டத்தைக் காண மிகப்பெரிய மெல்போர்ன் மைதானத்தில் 86,174 ரசிகர்கள் வந்திருந்து ரசித்தனர். மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு வந்திருந்த மிகப்பெரிய கூட்டமும், அவுஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு வந்திருந்த மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இதுதான்.

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை