கொவிட்-19: சீனாவை விஞ்சி உலக நாடுகளில் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவெங்கும் பாடசாலைகள் மூடப்பட்டு, பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் கட்டாய சேவைகள் தவிர்த்து அனைத்து பணிகளும் முடக்கப்பட்டுள்ளன.

உலகெங்கும் பல அரசுகள் உட்செல்லல் வெளியேறல் உட்பட மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தியுள்ளன. இந்த வைரஸ் தொற்று தீவிரம் குறைந்திருக்கும் சீனா மற்றும் தென் கொரிய நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வைரஸ் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து கவலை அடைந்திருப்பதோடு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மீது பிடியை இறுக்கியுள்ளன.

கொவிட்–19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று கடந்த டிசம்பரில் முதல் முறை கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் முதல் முறையாக தற்போது சீன பெரு நிலத்திற்கு வெளியில் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உலகளாவிய வைரஸ் தொற்றின் ஒரு புதிய அச்சுறுத்தலாக இது உள்ளது.

சீனாவில் கடந்த ஞாயிறு முடிவின்போது 24 மணி நேரத்தில் 16 புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் மொத்தம் 80,860 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு இவர்களில் 67,000 க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

எனினும் இந்த நோய்த் தொற்று ஏற்பட்ட நாடு என்ற வகையில் அதிக நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருக்கும் நாடாக சீனா தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் அண்மைய தினங்களில் பல நாடுகளிலும் இந்த வைரஸ் பரவல் தீவிரம் கண்டுள்ளது.

இதில் ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் இத்தாலியில் 24,000க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்து ஈரானில் 14,000 பேருக்கும், ஸ்பெயினில் குறைந்தது 7,000 பேருக்கும் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,400ஐ தாண்டியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நியூயோர்க் நகரத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. உணவகங்களும், மதுபான விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

இதன்படி தற்போது உலகெங்கும் 146 நாடுகளில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 1,64,837 பேருக்கு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 6,500ஐ தாண்டி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜெர்மனி எல்லைகளுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஜெர்மனியும் தமது எல்லைகளை மூடியுள்ளது. அந்த நாடு பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைகளை நேற்று மூடியதாக அறிவித்துள்ளது.

நிலைமை மேலும் மோசமடைவதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் எச்சரித்திருக்கும் நிலையில் அந்த நாடு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் மையமாக தற்போது ஐரோப்பா மாறியிருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் அழுத்தம் கொடுத்திருந்தது.

உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸுக்கு முகம்கொடுப்பது குறித்து ஜ7 நாட்டுத் தலைவர்கள் நேற்று வீடியோ கொன்பிரன்ஸ் முறையில் ஆலோசித்தனர்.

பொருளாதார ஸ்தரமற்ற நிலையை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உட்பட உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள் வட்டி வீதத்தை குறைத்து ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எனினும் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளன.

பயணங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் விமானசேவைகளும் தொடர்ச்சியாக தமது விமானப் போக்குவரத்துகளை குறைத்துக்கொண்டுள்ளன.

இதில் எல்லைகளை மூடுவது குறித்து எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கும் ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான சுதந்திர நடமாட்டத்திற்கான சென்கன் உடன்படிக்கையை தொடர்ந்து அமுல்படுத்த முயற்சிக்கும் நிலையில் மூன்று அண்டை நாடுகள் மற்றும் லக்சம்பேர்க்கிற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் அதன் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாட்டு எல்லைகள் இன்னும் திறக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. பெர்லினில் அனைத்து மதுபான விடுதிகள், களியாட்ட இடங்கள், உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டு நாடெங்கும் பெரிய கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் தற்போது நோய்த் தொற்று எண்ணிக்கை 5,000 நெருங்கி இருப்பதோடு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை ஜெர்மனி மருந்து உற்பத்தி நிறுவனமான பயோடெக் மேம்படுத்தி இருக்கும் சாத்தியமான தடுப்பு மருந்தை கொள்வனவு செய்ய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விருப்பம் வெளியிட்டது தொடர்பில் கருத்து வெளயிட்ட வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், “முக்கிய பெறுபேறுகளை ஏனையவர்கள் அணுகுவதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை” என்றார்.

பொலந்து, செக் குடியரசு மற்றும் டென்மார்க் போன்ற ஜெர்மனியின் அண்டை நாடுகள் ஏற்கனவே தமது எல்லைகளை மூடி பல கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துள்ளன.

எனினும் பல நாடுகளும் தமது நாட்டுக்குள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. செக் குடியரசு நாட்டின் கிழக்கு பகுதியை வெளிப் பிரதேசங்களில் இருந்து துண்டித்துள்ளது.

போலந்து நேற்றுத் தொடக்கம் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளது. அந்த நாடு சர்வதேச விமானங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கள் சுற்றுலாவுக்கு எல்லையை மூட இணங்கியுள்ளன. பொருட்கள் மற்றும் பணியாளர்கள் எல்லையை கடப்பதற்கு அனுமதித்துள்ளன.

15 நாள் அவசர நிலையின் கீழ் ஸ்பெயின் தமது 47 மில்லியன் மக்களுக்கு கடந்த சனிக்கிழமை தொடக்கம் பகுதி அளவான பயணத் தடைகளை அறிமுகம் செய்தது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் பணி நிமித்தம் இன்றி வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடி 15 நாள் அவசர நிலையை நீடிப்பதற்கும் ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது.

போர்துகலிலும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டில் 112 நோய்த் தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் தற்போது புதிதாக 841 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு நாட்டில் மொத்தம் 2,200 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

சீனாவுக்கு அடுத்து அதிக வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடாக உள்ள இத்தாலியில் 1,800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வைரஸின் பாதிப்பு மோசமானதாகவும் பரந்த அளவிலும் இருப்பதாக பிரதமர் குயிசப் கொண்டே குறிப்பிட்டுள்ளார். மீள் கட்டமைப்பு திட்டங்கள் தேவைப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

“கொரோனா வைரஸுக்குப் பின் நாம் முன்னர் போல் இருக்க மாட்டோம். வர்த்தகம் மற்றும் தடையற்ற சந்தை பற்றி நாம் மீளாய்வு செய்ய வேண்டி இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

1992 பார்சிலோன ஒலிம்பிக் போட்டிக்கான மைதானத்தை வடிவமைத்த 92 வயதான இத்தாலியின் புகழ்பெற்ற கட்டடக் கலைஞரான விட்டோரியோ கிரகோட்டி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறையாகும்.

இரண்டாவது அலை குறித்து அச்சம்

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் வைரஸினால் மீண்டும் ஆசியாவில் இரண்டாவது அலையாக வைரஸ் பாதிப்பு தீவிரம் அடையும் அச்சம் அதிகரித்துள்ளது.

சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அண்மைய தினங்களில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு ஸ்திர சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கடும் நடவடிக்கைகள் இதற்கு காரணமாகும்.

இந்நிலையில் இந்த நாடுகளில் தற்போது வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. சீனத் தலைநகர் பீஜிங்கை வந்தடையும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுகின்றனர். முன்னதாக இந்த பயணிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த வைரஸ் தொற்றின் ஆரம்பப் புள்ளியாக இருக்கும் வூஹான் நகரில் உள்ள மக்கள் தொடர்ந்து அங்கிருந்து வெளியேற நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. நாட்டுக்குள் வைரஸ் தொற்று பரவும் ஆபத்தை தடுக்கவே இந்த கட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதாக சீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 74 பேருக்கு கொரோனா இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் அங்கு இதுவரை 8,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் பலியாகி உள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸினால் மேலும் 129 பேர் உயிரிழந்திருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி நேற்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்த நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது.

“அனைவரும் இந்த வைரஸ் பற்றி தீவரமான எடுத்துக்கொள்ளுங்கள், எந்த மாகாணத்திற்கும் பயணிக்க முயற்சிக்காதீர்கள் என்று எல்லோரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஈரான் சுகாதார அமைச்சின் பேச்சாளர் கினெஷ் ஜஹன்பூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை ஈரான் உயிர்மட்டத் தலைவரினால் நியமிக்கப்பட்ட மதத் தலைவர்களின் குழுவைச் செர்ந்த உறுப்பினர் ஒருவரும் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரச தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. 78 வயதான அயொதுல்லா ஹஷெம் பதாயி கொல்பயெகானிப்பின் உயிரிழப்பு மூலம் அந்நாட்டில் உயிரிழந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை