19 வயது: தேசிய அணியில் இடம்பிடித்த அசங்க குருசிங்க

பாடசாலைகளுக்கிடையிலான பாரிய சமர் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான பாரிய சமர் கிரிக்கெட் போட்டிகளானவை வெளிநாடுகளில் உள்ள மேற்படி பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கு தமது பழைய நண்பர்களைப் பார்த்து பேசவும், உல்லாசமாக பொழுதை போக்கவும் உகந்த இடமாக மாறி வருகின்றன. எனவே அவ்வாறான பழைய மாணவர்களின் வருகை தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

பாடசாலையில் படிக்கும் காலத்தில் தனது 19 ஆவது வயதிலேயே தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பது மிகவம் அரிதானது. இந்த அரிய வாய்ப்பை ஒருசில கிரிக்கெட் வீரர்கள மாத்திரமே பெற்றுள்ளனர். இவ்வாறான அரிய வாய்ப்பை பெற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் நாலந்தா கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் அசங்க குருசிங்க. மேற்படி பாடசாலையில் இருந்து ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்ற இருவர்களில் ஒருவர் இவராவார். மற்றவர் முன்னாள் இலங்கை அணியின் மற்றொரு கேப்டன் ரொஷான் மஹானாம நாலந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை ரொஷான் மஹானாம வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மஹானாமவையடுத்து அந்த விருதை 1985 இல் வென்ற மற்றொரு நாலந்த கல்லூரி மாணவன் அசங்க குருசிங்க ஆவார். தேசிய அணிக்காக விளையாடிய அசங்க, அணியின் மனேஜராகவும் பணியாற்றியுள்ளார். 1985இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றமை தனது கிரிக்கெட் துறையின் திருப்புமுனையாக அமைந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அதனால் 1985 ஆம் ஆண்டை நன்னாள் எளிதில் மறந்த முடியாது என்று அவர் மேலும் கூறுகிறார்.

எனது பாடசாலை சகா ரொஷான் மஹானாம 1983 இலும் 1984 இலும் மேற்படி விருதை இரு தடவைகள் வென்றபோது அவ்வாறான ஒரு விருதை வெல்லும் கௌரவம் எத்தகையது என்பதை நான் புரிந்துகொண்டேன். அது ஒரு அபூர்வ கௌரவம் மற்றும் செல்வாக்குள்ள விருது. அதிர்ஷ்டம் இருந்தால் மாத்திரமே அது நமக்குக் கிடைக்கும் என்று தான் நினைத்துக்கொண்டேன். அந்த விருதை வெல்ல ஒருவர் நல்ல திறமையுள்ளவராகவும் அந்த திறமையை குறிப்பிட்ட பருவ காலம் முழுவதும் தொடர்ந்து தக்கவைக்கக் கூடியவராக இருந்தால் மட்டுமே அதனை வெல்ல முடியும்.

ஒரு பாடசாலை கிரிக்கெட் வீரர் கடுமையாக பணியாற்ற வேண்டும். மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே எந்த விருதை வெற்றிகொள்ள முடியும் அதிர்ஷ்டவசமாக நான் மேற்படி 1982 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாடசாலை கிரிக்கெட் போட்டிகளில் எனது முழுத் திறமையையும் காட்ட முடிந்தது. அதன் மூலமே 1985 இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை என்னால் வெற்றிபெற முடிந்தது என்று குருசிங்க கூறுகிறார்.

மேற்படி விருதை வென்றமை எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் எனது தன்னம்பிக்கையை மேலும் வளர்த்தது. அதற்கு ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்தில நான் இலங்கை அணிக்காக எனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

19 ஆவது வயதில் அவரது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசங்க குருசிங்க விக்கெட் காப்பாளராக விளையாடவே தெரிவானார். அதன பின்னர் இடம்பெற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் அவர் விக்கெட் கீப்பராகவே விளையாடினார். ஆனால் அதன் பின் துடுப்பாட்ட வரிசையில் முக்கியமான 3 ஆம் இலக்க துடுப்பாளராக விளையாடிய அவர் முன்னணி வீரராக தொடர்ந்து அணியில் இடம்பெற்றார்.

எமது காலத்தில் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. எனவே அதனை நாம் ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்போம். அந்த விருது வளர்ந்து வரும் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியது.

கிரிக்கெட் விளையாட்டின் நுட்பங்களை சிறப்பாக வெளிகாட்டும் 3 ஆம் இலக்க வீரராக விளையாடிய அசங்க குருசிங்க இலங்கை அணிக்காக நம்பிக்கை ஏற்படுத்திய வீரர்களில் ஒருவராவார்.

இவரது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் 1985 நவம்பர் 3 ஆம் திகதி பாகிஸ்தானுக்கெதிராக ஹைதரபாத்தில் நடைபெற்ற போட்டியில் இடம்பெற்றது.

இவர் 147 ஒரு நாள் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடி மொத்தம் 3902 ஓட்டங்களை பெற்றார். இதில் 2 சதங்களும் 22 அரை சதங்களும் உள்ளடங்கின.

இவரது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1985 நவமபர் 7 ஆம் திகதி பாகிஸ்தானுக்கெதிராக கராச்சியில் இடம்பெற்றது.

மொத்தம் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அசங்க குருசிங்க மொத்தம் 2453 ஓட்டங்களை குவித்தார். இதில் 7 சதங்களும் 8 அரைச் சதங்களும் உள்ளடங்கின. 143 என்ற ஆகக் கூடிய தனியான ஓட்ட எண்ணிக்கையை பெற்ற இவரது சராசரி ஓட்ட எண்ணிக்கை 38.92 ஆகும்.

தனது பாடசாலை காலத்தில் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் மைதானத்துக்கு வருவார்கள். இப்போது அதிகளவு கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன. தொலைக்காட்சியில் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புவதும் ரசிகர்கள் ஆர்வத்தை குறைத்து விடுகிறது.

1983 இல் இடம்பெற்ற ரோயல்- நாலந்த பாடசாலை கிரிக்கெட் போட்டியை மறக்க முடியாத நாங்கள் 5 வெற்றிகளுடனும் ரோயல் கல்லூரி 7 வெற்றிகளுடனும், விளையாடினோம். மைதானத்தில் ரசிகர்கள் பெரும் திரளாக குமியிருந்ததை இன்னும் மறக்க முடியாமல் உள்ளது.

தற்போதைய பாடசாலை கிரிக்கெட் தரத்துக்கும் இலங்கை ஏ அணி மற்றும் தேசிய அணிகளுக்கிடையிலான இடை வெளி அதிகமாகக் காணப்படுகிறது. இப்போதைய தேசிய அணியில் இடம்பிடிப்பது எளிதானதல்ல. உடம்பை சீராக வைத்துக்கொள்வதும் களத்தடுப்பில் மிகுந்த திறமை காட்டுவதும் முக்கியமாகும். பாடசாலை காலத்திலேயே களத்தடுப்பில் அதிக அக்கறை காட்டப்படவேண்டும் என்றும் அசங்க குருசிங்க கூறுகிறார்.

முழுமையான கிரிக்கெட் வீரராக வேண்டுமானால் எமது உடம்மை தொடர்ந்து சீராக வைத்துக்கொள்வது முக்கியம். அதேநேரம் அர்ப்பணிப்பு, அக்கறை ஆகியவையும் முக்கியமானவையாகும்.

1996 உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற முக்கிய பங்களிப்பு வழங்கிய வீரர்களில் அசங்க குருசிங்கவும் ஒருவர். அச்சுற்றுப் போட்டியில் அவர் மொத்தம் 307 ஓட்டங்களை குவித்தார். இதில் 3 அரைச்சதங்கள் அடங்கின. 51.16 என்ற சராசரியுடன் கூடிய மேற்படி ஓட்ட எண்ணிக்கை அனைத்து அணி வீரர்களிலும் ஆறாவது அதிக ஓட்ட எண்ணிக்கையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதி டெஸ்ட் போட்டியிலும் அவர் மிகவும் நிதானமாக ஆடி 239 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்றிருந்தார். இந்த போட்டி 1996 செப்டம்பரில் சிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றது.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை