கொவிட்-19: இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் முடக்கம்

உலகளாவிய வைரஸ் தொற்று 150,000ஐ தாண்டியது

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இத்தாலிக்கு அடுத்து ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸும் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளன. இந்த வைரஸ் தற்போது 152க்கும் அதிகமான நாடுகளில் 150,000க்கும் அதிகமானவர்களை தொற்றியிருப்பதோடு 5800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி ஸ்பெயினில் உணவு கொள்வனவு, மருத்துவம் அல்லது வேலை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்றினால் ஸ்பெயினில் 196 பேர் உயிரிழந்திருப்பதோடு இத்தாலிக்கு அடுத்து ஐரோப்பாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்், பிரதமர் பெட்ரோ சான்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் (45) கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோமேஸ் இருவரும் நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் பிரான்ஸில் உணவு விடுதிகள், மதுபான விடுதிகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதோடு உணவுக் கடைகள், மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் புகையிலைக் கடைகள் தொடர்ந்து திறந்திருக்கும் என்பதோடு நேற்று உள்ளுர் தேர்தலும் திட்டமிட்டபடி நடைபெற்றது.

பிரான்ஸில் சுமார் 4,500 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா தமது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத் தடையை பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இது இன்று திங்கட்கிழமை தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் விமானநிலையங்களில் குழப்ப சூழலை ஏற்படுத்தி இருப்பதோடு நாட்டுக்குள் வரும் பயணிகள் மருத்துவ சோதனைக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2,700க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வீடியோ முறையில் அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

இதுகுறித்து தலைநகர் ஒட்டாவாவிலுள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் இல்லை. இருந்தாலும், நான் முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வீட்டிலிருந்தபடியே அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்கு தொழில்நுட்பம் எனக்கு உதவுகிறது என்றார் அவர்.

ட்ரூடோவின் மனைவி சோபிக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

எல்லைகள்,

விமானநிலையங்கள் பூட்டு

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் பல நாடுகளில் பாடசாலைகள் மற்றும் வர்த்தகங்கள் மூடப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் எல்லை கடப்பது தடுக்கப்பட்டிருப்பதோடு, பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இத்தாலியும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தப்பது.

இந்நிலையில் நாட்டுக்குள் வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா நேற்று அறிவித்துள்ளது.

“எமது வாழ்க்கைப் போக்கில் சில மாற்றங்களை நாம் கொண்டுவரவுள்ளோம்்” என்று குறிப்பிட்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், இது நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் என்று நேற்று குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் சுமார் 250 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு மூவர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைக்கு 50 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கினார். ஆஸ்திரியா மற்றும் கனடா நாடுகளும் இதுபோன்ற அறிவிப்பை கடந்த சனிக்கிழமை வெளியிட்டன.

ஐரோப்பிய நாடுகள் எல்லைகளை கட்டுப்படுத்துவதை தீவிரப்படுத்தியிருப்பதோடு சிலி இரு சொகுசுக் கப்பல்களில் இருக்கும் 1,300க்கும் அதிகமானவர்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்தக் கப்பலில் இருந்த வயதான பிரிட்டன் நாட்டவர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே அந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐரோப்பாவில் வைரஸுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மிலான் தொடக்கம் மெட்ரிட் வரை வீதிகள் மற்றும் சதுக்கங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சில இத்தாலியர்கள் தனிமையில் இருந்து மீள தமது வீடுகளின் ஜன்னல்கள் வழியாக பாட்டுப்பாடி தமது ஆதரவை வெளியிட்டனர்.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உச்சம் பெற்று 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் காலப்பிரிவில் ஈரானில் 97 பேர் உயிரிழந்திருப்பதோடு ஸ்பெயினில் 63 பேர் பலியாகியுள்ளனர்.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஈரானில் இதுவரை 611 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு 12,729 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகளாவிய நோய்த்தொற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக தற்போது ஐரோப்பா மாறியிருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த டிசம்பர் கடைசியில் இந்த வைரஸ் முதல்முறை தோன்றிய சீனாவில் உள்நாட்டு வைரஸ் தொற்று சம்பவங்கள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன.

சீனாவில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த 16 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஒரு வாரத்திற்கு மேலான காலத்தில் பதிவான அதிக சம்பவமாகும்.

சீனாவில் அதிகபட்சமாக 80,800 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 3,200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியாவில் மேலும் 76 புதிய கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இத்துடன் அங்கு அந்நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,162க்கு உயர்ந்துள்ளது.

இதுவரை தென் கொரியாவில் 75 பேர் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்குப் பலியாயினர். இந்த வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருவதாக நம்பப்படுகிறது.

நோர்வே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் திங்கட்கிழமை தொடக்கம் மூடவுள்ளது. இருப்பினும், வெளிநாடுகளிலிருந்து திரும்பும் நோர்வே குடிமக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் கட்டாய தனிமைப்படுத்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் கொரோனா வைரஸ் தொற்றினால் 111 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றுத் தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு அனைத்து சர்வதேச விமானங்களையும் இடைநிறுத்தும் அறிவிப்பை சவூதி அரேபியா வெளியிட்டுள்ளது.

சவூதியில் இதுவரை 86 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கா, மதீனா நகரங்களுக்கான உம்ரா புனிதப் பயணங்களையும் சவூதி அரேபிய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் தொழுகை மற்றும் வழிபாடுகள் நிறுத்தப்படுவதாக பலஸ்தீன நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கின் பல நாடுகளிலும் இவ்வாறான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

வத்திக்கானின் சம்பிரதாயமான ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள் வழிபாட்டாளர்கள் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ள நிலையில், ராணி எலிசபத் பாதுகாப்பு காரணமாக பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 93 வயதான இங்கிலாந்து ராணி எலிசபத், அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விண்ட்சர் கோட்டைக்கு மாறியுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செஷயர் மற்றும் கேம்டனுக்கான இங்கிலாந்து ராணியின் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி

மனிதப் பாதிப்பின் வேகத்திற்கு ஒப்ப கொரோனா வைரஸ் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்ட நிலையில் பொருளாதார மந்த நிலை ஒன்று பற்றி அச்சம் நிலவி வருகிறது.

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பில் சீனாவுக்கு வெளியில் இருக்கும் தனது அனைத்து விற்பனையகங்களையும் மார்ச் 27 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்திருக்கும் அதேவேளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வேலை இழப்புகள் குறித்து அதன் நிறைவேற்று அதிகாரி லெக்ஸ் க்ரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

விமானசேவைகள் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்களை ரத்துச் செய்துள்ளது. சில விமானநிலையங்கள் விமானத் தளங்களை மூடியுள்ளன.

இத்தாலி கார் உற்பத்தி நிறுவனமான பெராரியின் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு உற்பத்திகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

Mon, 03/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை