கோவிட் 19 பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு வழங்க கோருகிறது அரசு

கொரோனா தொற்றுள்ள முதலாவது நபர் கொழும்பில் கண்டுபிடிப்பு

சிலாபத்திலிருந்தும் பெண்ணொருவர் ஐ.டி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதி

கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று கொழும்பில் கொரோனா தொற்றியுள்ள முதலாவது நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார்.

அத்துடன் இத்தாலியிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுள்ள சகல அறிகுறிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நேற்று அம்பியூலன்ஸ் மூலம் உடனடியாக ஐ.டி.எச் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் 52 வயதையுடைய வரென்றும் இந்நபர் இத்தாலி சுற்றுலாக் குழுவினருக்கு வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு தற்போது நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் டொக்டர் அனில் ஜாசிங்ஹ குறிப்பிட்டார். இத்தாலி சுற்றுலாக் குழு பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நேற்று சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான சகல அறிகுறிகள் இருந்தமை உறுதியானதையடுத்தே கொழும்பு ஐ.டிஎச் தொற்று நோயியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிலாபம் வைத்தியசாலைக்கு நேற்றுக் காலை 10 மணியளவில் வந்த இந்தப் பெண் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் ஏனையோருடன் சேர்ந்து சுமார் அரை மணி நேரமாக காத்திருந்தார்.

அப்பெண்ணுக்கு நோய்த்தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததையடுத்து வைத்தியசாலையிலிருந்த அனைவரும் அவரை விட்டு ஓடி ஒளிந்ததாக கூறப்படுகிறது. எவரும் அப்பெண்ணுக்கு சிகிச்சையளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் வைத்தியசாலையின் பணிப்பாளரே முன்வந்து அவருக்கான சோதனைகளை மேற்கொண்டுள்ளார். வைத்தியசாலை பணிப்பாளருடைய இச்செயற்பாடு அங்கே குழுமியிருந்த அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ள அப்பெண் 56 வயதுடையவராவார். இத்தாலியிலிருந்து கடந்த 03 ஆம் திகதி இலங்கை வந்த அவர், சிலாபத்திலுள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருகின்றார். அத்துடன் அண்மையில் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இப்பெண்ணுக்கு அனைத்து சோதனைகளையும் செய்த பின்னரே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். இப்பெண் சென்ற இடங்கள் மற்றும் பழகிய நபர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அரசு முறையான திட்டத்துடன் கூடிய பரந்துபட்ட வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கென 10 ஆம் திகதி முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தருபவர்களை நோய்தடுப்பு செயற்பாட்டுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.வெளிநாட்டிலிருந்து வருவோர் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம், புத்தளம் மாவட்ட குறூப் நிருபர் 

 

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை