மக்கள் ஆணையை செயற்படுத்த 19ஆவது திருத்தச் சட்டம் தடை!

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால்தான் எமது தேவைக்கேற்ப சில ஏற்பாடுகளில் திருத்தம் செய்யலாம். அரசியலமைப்பின் சில அம்சங்கள் காலம் கடந்தவை. அவற்றை திருத்தியமைக்க வேண்டும். அதற்கு எமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. பாராளுமன்றத்தில் எந்த இடையூறும் இன்றி அடுத்த ஐந்து வருடங்கள் ஆட்சி நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்கின்றனர்.

இவ்வாறு சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகிறார்.

'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள். அத்துடன் அவ்வாறான ஒரு சூழலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரிதும் பாதிக்கப்படும்' என்றும் அவர் மேலும் கூறினார்.

எமக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் மிகவும் மோசமாகியுள்ள நிலையில், என்ன நடக்கப் போகின்றது?

பதில்: இரு தரப்பினருமே தோல்வியடையப் போகிறார்கள். இதுதான் நடக்கப் போகிறது.

கேள்வி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக இணைந்து போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், அங்கும் இரு தரப்பினருக்கும் இடையே சிக்கல் நிலவுகிறதே?

பதில்: இங்கு எந்தவித சிக்கலும் இல்லை.இரு கட்சிகளும் மொட்டு சின்னத்தில் போட்டியிடப் போகின்றன. ஒவ்வொரு கட்சியும் தனது சார்பில் போட்டியிட மூன்று வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். அதில் அதிக வாக்குகளைப் பெறுபவர்களே பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.

கேள்வி: ‘தான் சரியான நேரத்தில் கழுகைப் போல் தாக்குவேன்’ என்று மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருக்கிறாரே? இது யாரைக் குறிக்கிறது?

பதில்: இவ்வாறு சர்ச்சைக்குரிய பேச்சுகளை தவிர்த்து விட்டு தேர்தல் வேலைகளில் மும்முரமாக இயங்குவதே அவர் இப்போது செய்ய வேண்டியதாகும்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த அமோக ஆதரவு இம்முறை பொதுத் தேர்தலிலும் மொட்டுக் கட்சிக்கு கிடைக்குமா?

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு, கொழும்பு, நுவரெலியா தவிர்ந்த ஏனைய அனைத்து இடங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியே வெற்றி பெற்றது. இந்த முறை பொதுத் தேர்தலிலும் மாற்றத்தை நான் காணவில்லை. நுவரெலியா மற்றும் கொழும்பில் சில மாற்றங்கள் ஏற்படலாம். எப்போதுமே ஜனாதிபதித் தேர்தலில் வெற்று பெறும் கட்சி அடுத்து வரும் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெறும். அந்த நிலை தொடருமே தவிர மாற்றம் ஏற்படாது என்றுதான் நான் நினைக்கின்றேன். கடந்த இரண்டரை மாதங்களில் நாம் க.பொ.த சாதாரண தரத்தில் தோல்வியடைந்த ஒரு இலட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளோம். அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கியிருக்கிறோம். பெறுமதி சேர்வரி மற்றும் உழைக்கும் போதே செலுத்தும் வரி ஆகியவற்றையும் குறைத்திருக்கிறோம். எனவே நமக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்.

கேள்வி: நாடு இராணுவ ஆட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர கூறுகிறாரே?

பதில்: அப்படி ஒருபோதும் நடைபெறாது. இராணுவ ஆட்சியல்ல, ஒரு ஒழுங்கான நாடு என்ற வகையில் தான் நாடு சென்று கொண்டிருக்கிறது. இராணுவ ஆட்சிக்கும் ஒழுங்கான நாட்டுக்கும் தெளிவான வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டை ஒழுங்காக நடத்திச் செல்வதற்கான மக்கள் ஆனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை செயற்படுத்துகிறார்.

கேள்வி: படித்தவர்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற மக்கள் கருத்து பரவலாக நிலவுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் படித்தவர்கள் நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு எத்தகையது?

பதில்: அரசியலுக்குள் நுழைவதற்கு கல்வி மாத்திரம் போதாது. அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வும் அரசியல் ஞானம் அல்லது அனுபவமும் இருக்க வேண்டும். சட்டத்தரணிகள் மட்டுமே பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று கருத்துக் கூறப்பட்டது. ​ெடாக்டர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரும் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும். இவ்வாறானோரின் பிரதிநிதித்துவம் இருந்தால் அது ஆரோக்கியமான பாராளுமன்றமாக இருக்கும்.

கேள்வி: 19 ஆவது திருத்தச் சட்டம் சிறப்பான ஆளுமைக்கு ஒரு இடைஞ்சல் என்று கருதப்படுகிறது. இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?

பதில்: நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த ஜனாதிபதிக்கு தெளிவான மக்கள் ஆணை இருக்க வேண்டும். அவருக்கு அந்த மக்கள் ஆணை கிடைத்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தினால் அதனை அவர் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது.

கேள்வி: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் கலாசாரம் பற்றி விளக்க முடியுமா?

பதில்: நல்லாட்சி அரசாங்கம் விட்ட பிழைகளை மீண்டும் தொடரக் கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் புதிதாக ஆணையை வழங்கினர். அவர் பொலிஸ் விசாரணைகளிலோ நீதிமன்ற விசாரணைகளிலோ இடையூறு செய்யவில்லை. அதிகாரிகள் சுதந்திரமாக முடிவெடுக்க அவர் அனுமதித்தார். இதன மூலம் தடுப்புக்காவலில் இருந்த சிலர் பிணையில் விடுதலையாகினர்.

 

-உதித்த குமாரசிங்க...

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை