துருக்கியின் தாக்குதலில் 19 சிரிய படையினர் பலி

இரு விமானங்கள் வீழ்த்தப்பட்டன

இத்லிப்பில் துருக்கியின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் பத்தொன்பது சிரிய படையினர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவ வாகனத் தொடரணி மற்றும் இராணுவ தளம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரிய போர் விமானங்கள் இரண்டையும் துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சிரிய வான் பகுதியில் துருக்கி விமானங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று சிரிய அரசுக்கு உதவி வரும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வான் தாக்குதல்களில் 33 துருக்கி படையினர் கடந்த வாரம் கொல்லப்பட்டதை அடுத்து இத்லிப்பில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழல் துருக்கி மற்றும் சிரிய அரசுக்கு ஆதரவளிக்கும் ரஷ்யாவுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட சிரிய போர் விமானங்களின் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக இத்லிப்பில் இறங்கியுள்ளனர். இங்கு துருக்கி படை மற்றும் கிளர்ச்சியாளர்கள், சிரிய அரச படையுடன் சண்டையிட்டு வருகின்றனர். மறுபுறும் துருக்கியின் மூன்று ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக சிரியா குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் வட மேற்கின் வான் பகுதி மூடப்படுவதாகவும் அதனை மீறி பறக்கும் விமானங்கள் விரோதச் செயலில் ஈடுபடுவதாக கருதப்பட்டு சுட்டுவீழ்த்தப்படும் என்றும் சிரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது.

சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பட டஜன் டாங்கிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இத்லிப்பில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி குறிப்பிட்டுள்ளது.

இத்லிப்பில் புதிதாக படை நடவடிக்கையை ஆரம்பித்திருக்கும் துருக்கி, ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்று வலியுறுத்தியுள்ளது.

சிரிய இராணுவத்தின் 2,212 உறுப்பினர்களை வீழ்த்தியதாக துருக்கி குறப்பிட்டுள்ளது. இவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்து அல்லது பிடிப்பட்டதையே துருக்கி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

எனினும் கடந்த பெப்ரவரி 29 தொடக்கம் 100 க்கும் அதிகமாக சிரிய துருப்புகள் மற்றும் அரச ஆதரவு படையினரே கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் அதிகரித்திருக்கும் சூழலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அடுத்த வாரம் சந்திப்பதற்கு துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எதிர்பார்த்துள்ளார்.

சிரிய கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாதிக்களிடம் இருந்து இத்லிப் பிராந்தியத்தை ரஷ்யாவின் உதவியோடு கைப்பற்றுவதற்கு சிரிய அரச படை உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சிரியாவில் கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி மாகாணமாக இத்லிப் உள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் சிரிய படையின் முன்னெற்றத்தை அடுத்து சுமார் ஒரு மில்லியன் பொதுமக்கள் துருக்கி எல்லையை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

ஏற்கனவே மில்லியன் கணக்கான சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி இருக்கும் துருக்கி மேலும் அகதிகளை ஏற்பதற்கு போதுமான வளம் தம்மிடம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவுடன் 2018 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இத்லிப்பில் துருக்கி படையினர் கண்காணிப்பு பணியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். துருக்கி கண்காணிப்பு சாவடிகளுக்கு அப்பால் சிரிய படைகள் வாபஸ் பெறாத பட்சத்தில் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வது பற்றி துருக்கி ஜனாதிபதி முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சிரிய இராணுவத்திடம் இருந்து இரு முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் மீண்டும் கைப்பற்றிய நிலையிலேயே துருக்கி படையினர் மீது கடந்த வாரம் வான் தாக்குதல் நடத்தப்பட்டது.

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை