கொவிட்-19: உயிரிழப்பு 8000 ஆக உயர்வு: 200,000 பேருக்கு தொற்று

ஐரோப்பிய ஒன்றிய எல்லைகள் பூட்டு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் எல்லைக்கு வெளியில் 30 நாள் பயணத் தடையை விதித்துள்ளது.

இந்த புதிய நடவடிக்கை 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதேபோன்று ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே மற்றும் சுவிட்ஸர்லாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டன் பிரஜைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயினில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு பிரான்ஸ் முழு நாட்டையும் முடக்கும் வகையில் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது.

கொவிட்–19 வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டியுள்ளது. நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 200,000ஐ எட்டியுள்ளது. 170 நாடுகளில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் இந்த வைரஸ் தோன்றிய சீனாவுக்கு வெளியில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் இத்தாலியில் 31,500க்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாலியில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,105 இல் இருந்து 2,503 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலி முழுவதும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியை அடுத்து ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயினில் 13,716 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 533 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் யாரேனும் வெளியே சென்றால், அவர்கள் எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்கள் என்ற காரணத்தோடு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,730ஆக உயர்ந்துள்ளது. 175 பேர் இறந்துள்ளனர். பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது. எனினும் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக ஈரான் உள்ளது. அந்நாட்டில் 16,000 க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 988 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் உள்நாட்டில் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அவைகளை மூடுவதற்கு நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதேவேளை அமெரிக்காவில் 850 பில்லியன் டொலர் உக்குவிப்பு நிதி ஒன்றை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்கர்களுக்கு உடன் காசோலைகளை அனுப்புவதற்கு எதிர்பார்ப்பதாக கருவூலச் செயலாளர் ஸ்டீவ் ம்னுசின் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கும் இந்த வைரஸ் பரவி இருப்பதோடு அங்கு 6,300 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை