கொவிட்-19: உலகில் உயிரிழப்பு எண்ணிக்கை 7000ஐ தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி இருப்பதோடு நோய்த் தொற்று பதிவான நாடுகள் 152 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் உலகெங்கும் 173,344 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு நேற்று குறிப்பிட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதோடு உலகெங்கும் எல்லைகள் மூடப்பட்டு இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஐரோப்பாவின் சுதந்திர நடமாட்டங்களை உறுதி செய்யும் செங்கன் வலய நாடுகளுக்கு இடையிலான அவசியமற்ற பயணங்களை தடை செய்வதற்கு ஐரோப்பிய ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வரவிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளும் பயணிகளுக்கு மூடப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக ஐரோப்பா மாறியிருக்கும் சூழலிலேயே அங்கு அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியில் வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறி இருக்கும் இத்தாலியில் கடந்த திங்கட்கிழமை முடிவில் மேலும் 349 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,158 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் 23,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மறுபுறம் பிரான்ஸ், நாட்டை முற்றாக முடக்கும் செயற்பாட்டை நேற்று ஆரம்பித்தது. குடிமக்கள் அனைவரையும் வீட்டிலேயே தங்கியிருக்கும்படி ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு, பணிக்குச் செல்ல மற்றும் மருத்துவக் காரணிகளுக்கு மாத்திரமே வீட்டை விட்டு வெளியேற முடியும் என்று மெக்ரோன் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு புதிய உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாம் தற்போது போரில் இருக்கிறோம். அரசாங்கத்தின் முழு கவனமும் அந்தத் தொற்று நோயை எதிர்ப்பதில் உள்ளது” என்றார். பிரான்ஸில் 6,600க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 148 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளும் தமது நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா, சிலி மற்றும் ஏனைய நாடுகளும் தமது எல்லைகளை மூடியுள்ளன. பிரதான வீதிகளை முடக்கும் நடவடிக்கையாக அந்த வீதிகளில் முகக்கவசம் அணித்த இராணுத்தை பெரு நிறுத்தி இருப்பதோடு அயர்லாந்து புதிய சுகாதார ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. விமான சேவைகள் விமானப் பயணங்களை நிறுத்தி வருவதோடு வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன.

அரசுகள் கடன்கள் மற்றும் மானியங்களை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியபோதும் பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இன்றும் பாரிய அரசியல் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. பிரிட்டர் தொடர்ந்து பாடாசலைகளை திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை