இரு விமானங்களில் 181பேர் நேற்று வருகை

இத்தாலி, தென்கொரியாவிலிருந்து

பற்றி கம்பஸ், கந்தக்காடு முகாமுக்கு அனுப்பி வைப்பு

 தங்க வைப்பதற்கான செலவை அரசு ஏற்பு

 இலங்கையர் எவருக்கும் தொற்று இல்லை

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று அச்சுறுத்தல் தொடரும் நிலையில், இத்தாலி மற்றும் தென் கொரிய நாடுகளிலிருந்து 181 பயணிகளுடன் இரண்டு விமானங்கள் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

இரண்டு விமானங்களிலும் வருகை தந்துள்ள  181 பேரை மட்டக்களப்பு ’பெற்றி’ கெம்பஸில் கண்காணிப்பிற்காகத் தற்காலிகமாகத் தங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் இலங்கை பிரஜைகள் 179 பேரும் தென் கொரியப் பிரஜைகள் இருவரும் உள்ளடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத்தாலியிலிருந்து 15 பயணிகளுடன் விமானமொன்றும் தென் கொரியாவிலிருந்து 166 பயணிகளுடன் விமானமொன்றும் நேற்று நாட்டை வந்தடைந்தன.

அதேவேளை, 'பெற்றி’கெம்பஸ் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவைப் பெற்றுக் கொடுப்பதற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதுடன் 14 நாட்களுக்கு மூன்று வேளை உணவைப் பெற்றுக் கொடுக்கவேண்டியுள்ளது.

எனினும், தற்காலிகத் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிட மிருந்து எவ்வித கொடுப்பனவும் அறவிடப்பட மாட்டாது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி தற்காலிக தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நேற்று புனானை ரிதிதென்ன பகுதியில் இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச ரீதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியுள்ள நிலையில், ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவிற்கு வெளியே இத்தாலியில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகக் கவசம் அணியும் அவசியம் இல்லை. தொற்று நோயியல் பிரிவின் புதிய தகவல்கள் அடிப்படையில் 18 தனி நபர்கள் 'கொவிட்-19' நோய்த்தொற்று தொடர்பில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இதுவரை எந்தவோர் இலங்கையரும் இந்நோய்த்தொற்றுக்கு உள்ளாகவில்லையென்றும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவிக்கின்றது.

தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் நால்வரும், கராபிட்டி போதனா வைத்தியசாலையில் நால்வரும், குருணாகலை போதனா வைத்தியசாலையில் மூவரும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஐவரும், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் ஒருவரும், கம்பஹா வைத்தியசாலையில் ஒருவருமாக 18 பேர் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை சிறுவர்கள் உள்ளிட்ட எவருக்கும் முகக்கவசம் அணிய வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லையென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், நோயாளர்களும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களும் பொது இடங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய 104 நாடுகளில் கொவிட்-19 நோய்த் தொற்று பரவியுள்ளது. இதனால் 3809 பேர் உயிரிழந்துள்ளதுடன் 109,577 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 15பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று மாலை தகவல் வெளியானது. இதில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (வி)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை