கொரோனா வைரஸ்: வடக்கு இத்தாலியில் 16 மில். மக்களை தனிமைப்படுத்த உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த போராடி வரும் இத்தாலி 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

லொம்பார்டி மற்றும் மேலும் 14 மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முக்கிய நகரங்களான மிலான் மற்றும் வெனிஸ் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் பாடசாலைகள், உடற்பயிற்சி மையங்கள், அருங்காட்சியகங்கள், இரவு விடுதிகள் மற்றும் ஏனைய இடங்கள் மூடப்படுவதாக பிரதமர் கியுசெப்பே கொடே அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு வெளியில் இந்த வைரஸுக்கு எதிராக கடும் நடவடிக்கையாக உள்ள இந்தக் கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 3 வரை நீடிக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இத்தாலியில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளி விட்டு அமர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இத்தாலியில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ள இத்தாலியில் கடந்த சனிக்கிழமையாகும்போதும் இந்த வைரஸ் தொற்றின் வேகம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் இத்தாலி மக்கள் தொகையில் கால் பகுதியினர் பாதிக்கப்பட்டிருப்பதோடு நாட்டின் பொருளாதரத்தில் பலம்மிக்க பகுதிகளான வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்திருப்பதோடு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேர் உயிரிழந்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. இதில் மேலும் 1,200 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு கடந்த சனிக்கிழமையாகும்போது வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,883 ஆக உயிர்ந்துள்ளது.

“எமது மக்களின் சுகாதாரத்தை நாம் உறுதி செய்யவேண்டிய உள்ளது. இந்த நடவடிக்கையால் சில நேரம் மிகப் பெரிய அளவிலும் சில நேரம் சிறிய அளவிலும் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டி இருக்கும் என்பது எமக்குத் தெரியும்” என்று பிரதமர் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஐரோப்பிய நகரங்களில் இருந்து நேற்று மிலான் நகரை நோக்கி ஏழு விமானங்கள் வந்துள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் 10 மில்லியன் மக்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியமான லொம்பார்டியில் இருந்து அவசர நிலை தவிர்த்து வெளியேறவும் உள்ளே நுழையவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் பிரதான நகராக மிலான் உள்ளது. இதே கட்டுப்பாடுகள் 14 மாகாணங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

“பணி நிமித்தமான அவசர காரணம் அல்லது சுகாதார காரணம் தவிர்த்து இந்த பகுதியில் உள்ளே வருவது வெளிச்செல்வது முடியாது” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகெங்கும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 102,000 ஆக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதுவரை சுமார் 3,500 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பரில் இந்த வைரஸ் தோன்றிய சீனாவிலேயே அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

எனினும் சீனாவில் புதிதாக வைரஸ் தொற்று பதிவானவர்களின் எண்ணிக்கை அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை புதிதாக 40 பேருக்கே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை பதிவானதை விடவும் பாதியாகும்.

வைரஸினால் 27 பேர் உயிரிழந்திருப்பதோடு இது கடந்த ஒரு மாதத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். இவர்கள் அனைவரும் இந்த வைரஸின் மையப் புள்ளியாக உள்ள வூஹானைச் சேர்ந்தவர்களாவர்.

மறுபுறம் சீனாவுக்கு வெளியில் மோசமாக வைரஸ் தொற்றினால் பாதிப்புற்றிருக்கும் நாடுகளில் ஒன்றான ஈரானில் தற்போது சுமார் 6000 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 145 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியாவில் புதிதாக 367 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தென் கொரியா நேற்று அறிவித்தது. இதன்மூலம் அந்த நாட்டில் நோய்த் தொற்று ஏற்பட்டிவர்களின் எண்ணிக்கை 7,134 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ் பரவுவது அதிக கவலையை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ், அனைத்து நாடுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் 400க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 19 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க்கில் வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 44 இல் இருந்து 77 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

3,533 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் தென் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 64 வயதான ஆர்ஜன்டீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததன் மூலம் அந்நாட்டில் வைரஸினால் உயிரிழந்தவர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை அதிகரித்த நாடுகள் வரிசையில் பிரான்ஸ் (949), ஜெர்மனி (795), ஸ்பெயின் (441), பிரிட்டன் (209), நெதர்லாந்து (188) ஆகிய நாடுகள் உள்ளன.

கொலம்பியா, பல்கேரியா, கொஸ்டா ரிகா, மோல்டா, மாலைதீவுகள் மற்றும் பரகுவே ஆகிய நாடுகளில் முதல் கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொரோனா வைரஸால், சர்வதேச அளவிலான வர்த்தகம், சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் 30 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஸ்கொட்லாந்து, பிரான்ஸ் மகளிர் ரக்பி போட்டி, பார்சிலோனா மரதன் ஓட்டம், சர்வதேச ஐஸ் ஹொக்கி சம்பியன் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை