இரவு விடுதிகள், சூதாட்ட நிலையங்களுக்கு 02 வாரகாலம் தடை

சுப்பிரமணியம் நிஷாந்தன்

இரவு விடுதிகள் மற்றும் சூதாட்ட நிலையங்களுக்கு நேற்றுமுதல் இரண்டு வாரகாலத்துக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இராஜகிரியவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து வருகைத்தந்து கொழும்பில் தங்கியிருந்து பின்னர் வெளியேறியதாக நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்ட நபர் நேற்று காலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாரின் பொறுப்பின் கீழ் இவரை தனிமைப்படுத்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் கொழும்பில் ஒன்றாக தங்கியிருந்தவராகும்.

இதேவேளை, நேற்றுமுதல் இரவு விடுதிகள் மற்றும் சூதாட்ட நிலையங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு இரவு விடுதி மற்றும் சூதாட்ட நிலையங்களும் இரண்டு வாரங்களுக்கு இயங்க முடியாது. அவ்வாறு இயங்கினால் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா மற்றும் யாத்திரைகள் மேற்கொள்ளவும் இரண்டுவார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா,

தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 2287 பேர் உள்ளனர். தனிமைப்படுத்தும் நிலையங்களில் உள்ள 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 18 பேர் கந்தக்காடு கண்காணிப்பு முகாமிலேயே உள்ளனர். கந்தக்காடு முகாமில் 13 கட்டிடங்கள் உள்ளன.

அதில் 26 பிரிவுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த 26 பிரிவில் 3 பிரிவுகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதில் 90 சதவீதமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும்போதே நோய் தொற்றுடன் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஏனையவர்கள் வருகை தந்து 24 மணித்தியாலங்களுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாகும். மேலதிகமாக இரண்டு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை