sஇலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது

இணை அமைச்சர் நித்தியானந்தா ராய்

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாதென மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 9ஆவது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லையென இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள புதுடில்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்தும் அவர், கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கை மீள் பரிசீலனை செய்யப்படுமென முதலமைச்சர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்ததாக அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதுபோல் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென கூறியிருந்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணனின் கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை மந்திரி நித்தியானந்தா ராய் பேசுகையில், “இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது.

அரசியல் சட்டத்தின் 9ஆவது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை” எனப் பதிலளித்தார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது 

 

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை