கொரோனா தணிந்தது ஆபத்து; தடுப்பு நடவடிக்ைககள் தொடரும்

*33 மாணவர்களும் தொடர்ந்து கண்காணிப்பு

*20 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில்

குணமடைந்த சீனப் பெண் குறித்து மருத்துவர்கள் கூடுதல் கவனம்

கொரோனா ஆபத்து தணிந்து வருகின்ற போதும் வைரஸ் தொற்றியவர்கள் மேலும் கண்டுபிடிக்கப்படலாம் என்பதால், தற்பொழுது இடம்பெற்று வரும் எந்த ஒரு முன்னெடுப்பும் இன்னும் ஒரு மாத காலத்திற்கு தளர்த்தப்பட மாட்டாதென சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொரோனா தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட அச்ச நிலை குறைந்துள்ளதாக கூறிய அவர், வைரஸ் பரவியதற்காக சீன பிரஜைகளை புறக்கணிப்பதையோ மாணவர்களை அழைத்து வந்த விமான சிப்பந்திகளின் குடும்பத்தினரை ஒதுக்குவதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இது வரை சந்தேகத்திற்கிடமான 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அவர், 33 மாணவர்களும் பூரண கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அதனை தடுப்பதற்காக தேசிய நடவடிக்கை குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார்.

இந்தக் குழு தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதோடு நாட்டுக்குள் கொரோனா வருவதை தடுக்க தேவையான சகல முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

சர்வதேச சுகாதார ஒழுங்குவிதிகளுக்கமைய இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது. இது தவிர நிபுணத்துவ டொக்டர் ஹேமந்த ஹேரத் தலைமையில் மற்றொரு குழு செயற்படுகிறது. விமானநிலையத்தினூடாக இடம்பெறும் செயற்பாடுகளை இக்குழு முக்கியமாக கண்காணிக்கிறது.

பலாலிக்கு வரும் சகல பயணிகளும் பரிசோதிக்கப் படுவதோடு ஸ்கேன் இயந்திரம் உட்பட தேவையான வசதிகளும் அங்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை வரும் சகல வெளிநாட்டு பிரஜைகளும் பதியப்படுவதோடு அவர்கள் நாட்டின் எப்பாகத்திற்குச் சென்றாலும் கண்காணிப்பதற்கான பொறிமுறையும் செயற்படுத்தப்படுகிறது.இது வரை இலங்கையில் ஒரே ஒரு கொரோனா நோயாளியே அடையாளங் காணப்பட்ட நிலையில், அவரும் குணமடைந்துள்ளார்.இது தவிர சந்தேகத்திற்கு இடமான 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீன அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவு காரணமாக உலகில் நான்காவது நாடாக இலங்கை ,வுஹானில் இருந்து தமது நாட்டவர்களை திருப்பி அழைத்துள்ளது.

கடந்த காலங்களிலும் அந்த நாடு இலங்கைக்கு பெருமளவு உதவி வழங்கியுள்ளது.யுத்த காலத்திலும் உதவியளித்துள்ளது.இவற்றை மறந்து விட முடியாது. சீன நாட்டவர்களை புறக்கணிப்பதையோ ஒதுக்குவதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வுஹானில் இருந்து அழைத்து வந்த 33 மாணவர்களுக்கும் எந்த நோயும் கிடையாது.அவர்கள் சிறப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களை தியத்தலாவையில் வைத்திருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.ஆனால் இந்த மாணவர்களை அழைத்துவரும் கடினமான செயற்பாட்டை விமான சிப்பந்திகள் மேற்கொண்டனர். அவர்களை பொறுப்பேற்க பல்வேறு தரப்பினரும் பின்வாங்கிய நிலையில் தியத்தலாவையில் சகல வசதிகளுடனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தவிர வேறு உகந்த இடம் இருக்குமென்று கருத முடியாது.நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை எடுத்த நடவடிக்கைகளை உலக சுகதார ஸ்தாபனம் வரவேற்றுள்ளது.

நோய் தொற்றிய பெண் இன்னும் சில தினங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர் நாட்டுக்கு அனுப்பப்படுவார்.அதன் பின்னர் தேவையான முடிவு எடுக்கப்படும்.

நோய் தடுப்பு செயற்பாடுகள் குறித்து பிரதமர் கூடுதல் கரிசனை காட்டி வருவதோடு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சும் நடத்தினார்.

ஆரம்பத்தில் மக்கள் அதிக அச்சத்துடன் இருந்தனர்.தேவையின்றி மக்களை அச்சப்படுத்தாது இதனைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணித்திருந்தார்.

பயம் காரணமாக மக்கள் கூடுதல் விலைக்கு முகக் கவசங்கள் வாங்கினர்.தற்பொழுது மக்களின் அச்ச நிலை தணிந்துள்ளது. நாம் நாளாந்தம் மக்களை அறிவூட்டி வருகிறோம். அனர்த்த நிலை தணிந்தாலும் எதிர்காலத்தில் மேலும் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படக் கூடும். எம்மை போன்று சில நாடுகள் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கவில்லை.

கொரோனா தொற்றிய நோயாளி நாடு திரும்பினாலும் இன்னும் ஒரு மாத காலத்திற்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எந்த ஒரு நோய் தடுப்பு செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட மாட்டாது. முகக் கவசம் பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை.

உலக சுகாதார ஸ்தாபன உப தலைவர் பதவியை ஏற்க வருமாறு எனக்குஅழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடி நிலையில் எங்கும் செல்ல நான் தயாராக இல்லை.அதனால் சுகாதார சேவைப்பணிப்பாளரை அங்கு அனுப்பி அவருக்கு அந்த பதவியை பொறுப்பேற்குமாறு அறிவித்துள்ளேன் என்றார்.

வுஹானிற்கு சென்று மாணவர்களை அழைத்து வந்த விமானப்படை சிப்பந்திகளின் பிள்ளைகள் பாடசாலைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

அவர்கள் தேசிய வீரர்கள்.தைரியமாக சென்று எமது மாணவர்களை அழைத்து வந்திருக்கிறார்கள்.அவர்களை முழு நாடும் பாராட்ட வேண்டும்.அவர்களுடைய பிள்ளைகள் தடையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர அதிபர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொரோனா தொடர்பான அச்சுறுத்தல் முற்றாக தணிந்துவிட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,இந்த தொற்று ​நோய் நாட்டுக்குள் பரவுவதை தடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதாவது முன்னெடுப்புகள் அவசியம் எனின் அதனையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

வேறு நோயாளர்கள் இல்லையென்று கூறிவிட முடியாது.அது தொடர்பான ஆபத்து இருக்கலாம் என்றார்.

கொரோனா பரவுவதை தடுப்பதற்கு ஊடகங்கள் வழங்கிய பங்களிப்பையும் வரவேற்ற அவர், சகல ஊடகங்களும் தமது பங்களிப்பை சிறப்பாக செய்ததாக குறிப்பிட்டார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை