தீர்மானத்திலிருந்து வெளியேறினாலும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடரும்

30/1 இலிருந்து வெளியேறுவதாக ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து இன்று வரை இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை விளக்கிக் கூறிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆணைக்கமைவாகவே இணை அனுசரணையிலிருந்து விலகி செல்வதாகவும் அவர் அறிவித்தார்.

அனுசரணையிலிருந்து விலகிச் சென்றாலும் நல்லிணக்கப் பொறிமுறை, பொறுப்புக்கூறல்களிலிருந்து விலகி செல்லப் போவதில்லை என்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவொன்று அமைக்கப்படுமெனவும் அமைச்சர் தினேஷ் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று உரையாற்றினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேலும் தெரித்ததாவது,

இலங்கையர்கள் 2019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மகத்தான ஆணை வழங்கியமை இந்த சபைக்குத் தெரிந்திருக்கும். சுபிட்சமான நடொன்றையும் நீதியான சமூகத்தையும் உருவாக்குவதற்கான கொள்கை வரைபுச்சட்டத்தை தொடர்வதற்காக இந்த ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் நிலையான அபிவிருத்தி, சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் 2009 மே 18 ஆம் திகதி புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் தோற்கடித்து முப்பதாண்டு கால மோதலை இலங்கை முடிவுக்கு கொண்டுவந்தது. மோசமான மோதலின் முடிவு அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்ததுடன் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் ஏனையவர்களின் ‘வாழ்வதற்கான உரிமை’யை வழங்கியது. 2009 மே மாதத்திலிருந்து இலங்கையில் பிரிவினைப் பயங்கரவாதத்தின் பேரில் ஒரு தோட்டா கூட வெடிக்கவில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலின் முடிவில் ஒரு இரவிலேயே நிரந்தர அமைதி வரும் என்ற மாயத் தோற்றம் இலங்கைக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த சபை கையாளும் பல்வேறு மோதல் நிலைகளைப் போலன்றி, இலங்கை தன்னை கட்டியெழுப்பும் நிலையில் இருக்கவில்லை. இலங்கைக்கு சில மீளாய்வுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் என்பன ஏற்கனவே தேவையாக இருந்தன.எமது நிலையான சமாதானம், நல்லிணக்க திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததை நாம் உணர்ந்திருந்தோம்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தார். இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்ப நிலையான நல்லிணக்க நடைமுறையை மஹிந்த அரசாங்கம் ஆரம்பித்தது.

அப்போதிருந்த, கள நிலைமைகளை இனங்கண்டு அந்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. எம்மைவிட சிறந்த வளங்களுடன் கூடிய நாடுகள் இவ்வாறான செயற்பாடுகளை எடுக்க பல தசாப்தஙகள் சென்றன. இந்நிலையிலே நாம் இந்த நடைமுறையை செயற்படுத்தியிருந்தோம்.

2014 டிசம்பரில் நான் ஒரு அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தபோது, கீழ்வரும் பல குறிப்பிடத்தக்க துறைகளில் நாம் முன்னேற்றம் கண்டிருந்தோம்.

கண்ணி வெடி அகழ்வு,மீள் குடியேற்றம், படையினர் பயன்படுத்திய காணிகளை மக்களிடம் கையளித்தல், மோதல் இடம்பெற்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல், சிறுவர் போராளிகள் உள்ளிட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை புனர்வாழ்வு மற்றும் ஒருங்கிணைத்தல்,துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மோதலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்டல், உள்நாட்டு பொறிமுறைகளை ஸ்தாபித்து பொறுப்புக் கூறல், சட்ட ஆட்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி ஆராய்தல்.

உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாடுகளை இலங்கை மக்களுக்காக நடைமுறைப்படுத்திய போதும் ஒரு சில ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு அங்கத்தவர்கள் சிலர், இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை தோற்கடித்த மற்றும் மனிதாபிமான நிவாரண மற்றும் நல்லிணக்க நடைமுறையை பாராட்டத் தவறியதை இங்கு குறிப்பிட வேண்டும்.

இலங்கையின் இந்த செயற்பாடுகள் இலங்கை மீதான ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளின் தீர்மானத்தில் இடம்பிடித்திருந்தன.

எவ்வாறெனினும் இலங்கையின் முன்னைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் உள்ளூர் நல்லிணக்க நடைமுறையை, அது பலனளிக்க ஆரம்பித்த நேரத்தில் திசை மாற்றிவிட்டனர். மனித உரிமைகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் மாறாக அப்போதைய இலங்கை அரசாங்கம் இலங்கை தொடர்பான ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 என்ற தீர்மானித்துக்கு இணை அனுசரணை வழங்கியது.

அதனையடுத்து இலங்கையின் முன்னைய அரசாங்கமானது மேற்படி 30/1 தீர்மானத்துக்கு, தவறுகளுடன் கூடிய இலங்கை தொடர்பான OISL அறிக்கையை பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அண்மைய காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடித்த ஒரேயொரு தேசிய பாதுகாப்பு அம்சமான இலங்கை பாதுகாப்பு படையினரின் வீர மிகு செயற்பாடுகளை நியாயமற்ற முறையிலும் நிந்திக்கும் வகையிலும் பயன்படுத்தியது. இந்நிலையில் அச் செயற்பாடுகளுக்கு மாறாக பல்வேறு சாட்சியங்கள்,

கீழ் காண்பவைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

- கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு போன்ற உள்ளூர் அறிக்கைகள்,

ஐக்கிய இராஜ்ஜியத்தின் லோர்ட்ஸ் சபையில் நசேபி பிரபு முன்னிலையில் வழங்கப்பட்ட தகவல்கள்,

அத்துடன் சவாலுக்குட்படுத்தப்பட்ட மற்றைய அம்சங்களின் அளவுக்கு அதிகமாக குறிப்பிடப்பட்ட சிவிலியன்களின் மரண எண்ணிக்கை

- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட ஐ. நா. மற்றும் இதர அறிக்கைகள்

இலங்கையானது அதன் அரசியலமைப்பு வரைபுச் சட்டத்துக்குள் செயற்படுத்தும் வகையிலான கடப்பாடுகள் மேற்படி தீர்மானத்தில் உள்ளடங்குகின்றன. இவை இலங்கை மக்களின் இறைமையை மீறுவதாக உள்ளதுடன் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகவும் அமைகின்றன. இணை அனுசாரணை தொடர்பாக தனது நிலைப்பாட்டை இலங்கையானது மீளவும் நினைத்துப் பார்ப்பதற்கு இது மற்றுமொரு காரணமாக உள்ளது.

நடைமுறையின்படி இலங்கையின் முன்னைய அரசாங்கமானது மேற்படி 30/1தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமை ஆளுமைக் கொள்கையின் அனைத்து ஜனநாயக கொள்கைகளையும் மீறுவதாக அமைகிறது.

தீர்மானத்தின் நகல் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கப்பட்டமை,

சர்வதேச அமைப்பொன்றின் நியமம் நாட்டுக்கு வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் பெறப்படாமை,

மேற்கூறிய இணை அனுசரணை தொடர்பான நடைமுறைகள் பற்றி பாராளுமன்றத்தில் எந்தவொரு குறிப்பும் இடம்பெறாதமை,

மிகவும் முக்கியமாக, தீர்மானத்தில் உள்ள ஏற்பாடுகள், நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பை மீறும் வகையில் இருப்பதால்,அதனை வெளியிட முடியாதிருந்தமை,

தொழில்சார்பான இராஜதந்திரிகள், கற்றோர், ஊடக மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் எல்லை மீறும் வகையில் அமைந்துள்ளமை.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவ்விடயம் தொடர்பாக தன்னுடன் ஆலோசிக்கப்படவில்லை என்று கூறியிருந்தமை

இலங்கையின் இறைமை மற்றும் கீர்த்திக்கு இன்றுவரை இவ்விடயம் ஒரு கறையாக அமைந்துள்ளன.

ஒரு சில நாடுகளை மட்டும் மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்மானத்தில் உள்ள ஏற்பாடுகளை, இலங்கையானது செயற்படுத்த முடியாத வகையிலும், அரசியலமைப்புக்கு ஒவ்வாத வகையிலும் இந்த இணை அனுசரணைத் தீர்மானம் அமைகிறது.

கௌரவமிக்க பாதிப்பு என்ற ரீதியில் மேற்படி செயற்பாடு சர்வதேச முறைமையில் இலங்கையின் நம்பிக்கையை பாழ்படுத்தியுள்ளது. அத்துடன் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையின் நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தியுமுள்ளது. மேற்படி பொறுப்பற்ற செயற்பாடு நீண்ட காலமாக நிலவிய,பிராந்திய உறவுகளிலும் மற்றும் அணி சாராமை மற்றும் தெற்காசிய ஒருமைப்பாடுகளையும் பாதித்துள்ளது. இவை இலங்கையின் வெளிநாட்டு கொள்கையை பூஜ்ய விளையாட்டுக்கு இட்டுச் சென்றதால் எனது நாடு சதுரங்க விளையாட்டில் மதிப்பற்ற காயாக மாற்றியுள்ளது.மேலும் இலங்கையை அதன் பாரம்பரிய நடுநிலைத் தன்மையிலிருந்து தேவையற்றவகையில் மாற்றியமைத்துள்ளது.

30/1 தீர்மானம் இலங்கையின் தேசிய புலனாய்வு செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பான நடைமுறைகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பையும் மிகவும் மோசமான வகையில்,குறைத்து மதிப்பிட்டுள்ளது.

2019 ஏப்ரல் மாத ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெறவும் இது காரணமாகியது.இந்தத் தாக்குதலில் தேவாலயங்களும் ஹோட்டல்களும் இலக்காகின. வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரும் இதில் உயிரிழந்தனர்.

அதனையடுத்து தேசிய பாதுகாப்பை மீண்டும் ஸ்திர நிலைக்கு கொண்டு வருவதில் அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

2015 அக்டோபரில் 30/1 தீர்மானத்தை இணை அனுசரணைக்குட்படுத்திய இலங்கையின் முன்னைய அரசாங்கத்தின் வெளிநாட்டமைச்சர் அது பற்றி 2019 மார்ச்சில் அறிக்கை விடுத்திருந்தார். அதில் அவர் வெளியிட்ட கருத்துகள் கேள்விக்குறியாக உள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற சுதந்திர தின விழாவில் உரையற்றிய போது ‘இலங்கையின் ஒவ்வொரு குடிமகனதும் உரிமையை நாம் பாதுகாப்போம்’ என்று குறிப்பிட்டார்.

இலங்கை மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப அணிசாரா, நடுநிலை வெளிநாட்டு கொள்கையை பின்பற்றுவதன் மூலம், விடயங்களைப் புதிதாக பரிசீலிக்கும் கடப்பாட்டுடன் எமது அரசாங்கம் உள்ளது. ‘பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மூலமான சுபிட்சமே’ எமது நிகழ்ச்சி நிரலாக அமைகிறது.

இந்த அடிப்படையின் கீழ் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவிக்கும் 40/1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொள்ளும்தீர்மானத்தை நான் இன்று முன்வைக்க விரும்புகிறேன். அதேநேரம் அதன் முன்னைய 30/1 என்ற 2015 அக்டோபர் மாத தீர்மானம் மற்றும் 2017 மார்ச் மாத 34/1 ஆகிய தீர்மானங்களையும் இது உள்ளடக்குகிறது. அத்துடன் மேற்படி தீர்மானங்களின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொண்டாலும் இலங்கை மக்கள் தொடர்பான பேண்தகு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான இலக்குகளை எட்டுவதற்கு இலங்கை தொடர்ந்து கடப்பாட்டுடன் இருக்கும்.

பேண்தகு சமாதானத்தை எட்டுவதற்கு உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறை மூலம் இலங்கை கடப்பட்டுள்ளது. அதேநேரம் 2030 பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டுள்ளவாறு இலங்கையின் குறிக்ளேகளை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஐ.நா.வினதும் அதன் முகாமைகளினதும் உதவியை இலங்கை தொடர்ந்து பெற்றுக்கொள்ளும்.

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை